உலகில் மாற்றுதிறனாளிகள் பலரும் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்கள். வாழ்க்கையில் முன்னேற ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து வருகின்றனர். இது போன்ற ஒரு சம்பவம் குமரி மாவட்டம் தக்கலை அரசு பள்ளியில் நடந்தது.
இந்த பள்ளியில் பிளஸ்–2 தேர்வை கல்குளம் சரல்விளை பகுதியை சேர்ந்த மாணவர் பிளஸ்சிங் சஜூ (வயது 17) எழுதினார். அவர் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி. சக மாணவர்கள் அவரை ஆச்சரித்துடன் பார்த்தனர். தேர்வுக்கான நேரம் தொடங்கியதும் மாணவர் பிளஸ்சிங் சஜூவுக்கு தேர்வு அறையின் கண்காணிப்பாளர் வினாத்தாளை கொடுத்தார். அதை வாங்கியதும், மாணவர் பிளஸ்சிங் சஜூ, விடைத்தாளில் கைகளுக்கு பதில் காலால் எழுத தொடங்கினார். வேகமாக அவர் எழுதியது அறையில் இருந்த சக மாணவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தில் தேர்வு அறைக்கு முதன்மை கண்காணிப்பாளர் ஐரனேஷ் குமார் வந்தார். அவர் மாணவர் பிளஸ்சிங் சஜூ காலால் தேர்வு எழுதுவதை பார்த்து அவரை பாராட்டினார். வழக்கமாக இரு கைகளையும் இழந்தவர்கள் பொது தேர்வு நேரத்தில் உதவியாளர் மூலம் தேர்வு எழுதுவது உண்டு. ஆனால் மாணவர் பிளஸ்சிங் சஜூ உதவியாளர் இல்லாமல் அவரே காலால் தேர்வு எழுதியது, மாணவரின் தன்னம்பிக்கையை காட்டுவதாக கூறினார்.
மாணவர் பிளஸ்சிங் சஜூவின் தந்தை எலியாஸ். கூலிதொழிலாளியான இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். பிளஸ்சிங் சஜூ 4 –வது மகன். பிறக்கும்போது இரண்டு கைகளும் இல்லாமல் மாற்றுத்திறனாளியாக பிறந்தார்.
இதற்காக அவர் மனம் வருந்தவில்லை. கைகளால் செய்ய வேண்டிய பணிகளை கால்களால் செய்ய பழகி கொண்டார். பள்ளிக்கு செல்லும் வயது வந்ததும் இவரும் பள்ளிக்கு சென்றார். அங்கு பாடங்களை கைகளால் எழுதுவதற்கு பதில் காலால் எழுத பழகிகொண்டார். 10–ம் வகுப்பு தேர்வு நடந்த போதும் காலால் தேர்வு எழுதி 386 மதிப்பெண் எடுத்தார். இப்போது பிளஸ்–2 தேர்வு எழுதி வருகிறார்.
இந்த தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பேன் என்று மாணவர் பிளஸ்சிங் சஜூ நம்பிக்கையுடன் உள்ளார். அவரது நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும் என்று சகமாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டினர்.
Tags:
Special News