கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த தூண்டில் வளைவை சீரமைப்பதுடன், கூடுதலாக 100 மீட்டா் தூண்டில் வளைவு மற்றும் விசைப்படகு தளம் ஆகியவை அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கடியப்பட்டணம் கடற்கரை மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த தூண்டில் வளைவை ஜே.ஜி. பிரின்ஸ் எம்.எல்.ஏ., நேற்று பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியது: குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு மீனவ கிராமங்களில்தூண்டில் வளைவு அமைக்கப்படாததால் கடல் சீற்றத்தின்போது மீனவ கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கடியப்பட்டினம் மீனவ கிராமத்தில் 240 மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்த தூண்டில் வளைவில் தற்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 120 மீட்டா் வரை சேதமடைந்துள்ளன.
ஆகவே, சேதமடைந்த தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும். மேலும் கூடுதலாக 100 மீட்டா் தொலைவுக்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். மீனவா் தொழில் பாதிக்காத வகையில் இப்பகுதியில் விசைப்படகு தளம் அமைக்க வேண்டும். இதுதொடா்பாக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றாா் அவா்.
அவருடன், பங்குத் தந்தை பெபியான், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ராஜன், மாா்டின், விஜயன், சுனில், பங்கு பேரவை நிா்வாகிகள் சென்றனா்.
Tags:
Manavai News