திருநயினார்குறிச்சி கரைகண்டேஷ்வர மகாதேவர் ஆலய ஸ்தல வரலாறு

திருநயினார்குறிச்சி கரைகண்டேஷ்வர மகாதேவர் 
ஆலய ஸ்தல வரலாறு 

த. தாணுலிங்கம் 
M.A.,M.A.,M.Com.,M.Ed.,M.Phil., D.G.T.

சிவ சிவ
முன்னுரை 

அன்பே சிவம்; சிவமே ஜெயம்; ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான காலப் பழமையும், அதுபோல் பேரும் புகழும் பெற்ற வரலாற்றுச் சிறப்புகளும், பல கல்வெட்டுகளையும் கொண்டு திருநயினார்குறிச்சியில் கரைகண்டேஷ்வர மகாதேவர் என்ற பெயர் கொண்டிருக்கும் சிவாலயம் பற்றி பக்தியோடு பார்ப்போம்.

ஆன்மிகம் நிறைந்த ஆலயங்கள் பல காணப்படுகின்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் வெள்ளிமலைப் பேரூராட்சிக்குட்பட்ட திருநயினார்குறிச்சியில் அமைந்துள்ளது.

தெய்வப்புலவர் வாழ்ந்த திருநாயினார்குறிச்சி என்பதே பெயர். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் மற்றொரு பெயர் நாயனார் வாழ்ந்த ஊர். எனவே திரு என்ற அடைமொழியோடு திரு-நாயனார் குறிச்சி என்றாயிற்று. வரலாற்றிலும் வள்ளுவ நாடு என்ற பெயர் காணப்படுகிறது.

அகர முதல எழுத் தெல்லாம்;
ஆதிபகவன் முதற்றே உலகு'

என்ற கடவுள் வாழ்த்து பாடலில் ஆதிபகவன் என்ற சொல் ஆதி சிவனையே குறிக்கும். எனவே திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே இவ்வாலயம் அமைந்திருக்க வேண்டும் என்பதே வெளிப்படை.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் பாடல்களும், சொற்களுமே ஆதாரங்கள். நாகர்கோவிலிலிருந்து 15 கி.மீ தூரம். நாகர்கோவிலிலிருந்து மேற்காக குளச்சல் செல்லும் சாலையில் திருநயினார்குறிச்சி ஊர் உள்ளது. இரணியல் முட்டம் சாலையில் 5 கி.மீ. தூரம். மணவாளக்குறிச்சி அருகாமையில் அமைந்துள்ளது.
கரைகண்டேஸ்வரம் மகாதேவர் ஆலயம் 

கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில் முகப்பு  
ஆலயம் வரும் பாதை 
அருள்மிகு கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில் திருநயினார்குறிச்சி மகாதேவரை சிவபெருமானை வழிபட வருகின்ற பக்தர்கள், தானாக அப்படியே வராமல், தன் நிலையிலிருந்து இறங்கி வரவேண்டும் என்ற முறையில் படிக்கட்டுகளும், நடைபாதையும் அமைந்துள்ளது. இறங்கி வருதல் என்பதன் பொருள்- நான் பெரியவன், பணக்காரன், படித்தவன், பெரிய பதவியில் இருப்பவன் என்கிற நிலையில் இருந்து இறங்கி சாதாரண ஒன்றுமே இல்லாத நிலையில் வருதல்.
ஆலயத்திற்கு இறங்கி வரும் படிக்கட்டு
திருக்கோவில் முன்பு நாம் காண்பது தீப ஸ்தம்பம் என்கிற கல்தூண் விளக்கு தூண். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால், பூ, பத்தி, கற்பூரம், நல்லெண்ணெய் - என பூஜைக்கு பயன்படுகின்ற பொருட்களை பக்தியோடு கொண்டு வருவார்கள். அவ்வாறு கொண்டு வருகின்ற நல்லெண்ணெயினை விளக்குக் தூணில் விட்டு விளக்கு ஏற்றி வைப்பார்கள். அணையா தீபம் விளக்கு தூணில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்.
தீப ஸ்தாபம் (கல்விளக்கு) மற்றும் பலிபீடம் 
விளக்குத் தூணுக்கு அடுத்தது காணப்படுவது பலி பீடமாகும். அழகிய வேலைப்பாடுகளுடன் சதுர வடிவில் கருங்கல்லால் பலி பீடத்தின் முன் சாற்றி நேரம் அமைதியாக சிவ சிந்தனையுடன் நிற்பார்கள். நான், தான் என்கிற ஆணவமாகிய மன நிலை இங்கே விட்டு விடப்படுகிறது. அதாவது பலியிடப்படுகிறது. பின்னர் நாம் இறைவனை வணங்க செல்வோம்.
நாம் இப்போது காண்பது சபா மண்டபம். இந்த மண்டபத்தை யார் கட்டியது? இதன் அமைப்பு சிறப்பு என்ன என்பதைப பற்றி பார்க்கலாம். பெரிய கல்தூண்கள் நட்டு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நிழலகமாகப் பயன்படுகிறது. மண்டபத்தின் ஈசானத்தில் காணப்படும் கல்தூனில் பசு சந்த்ரு சிவலிங்கத்திற்கு பால் வார்க்கின்ற பசுபதீஸ்வரர் சிலை அமைந்துள்ளது. இதுவே தன் இத்திருக் கோயிலின் தோற்றத்திற்கு மூலக் காரணமாகும்.

சேர நாட்டை சார்ந்த மன்னர் ஒருவர் நீண்ட காலமாக குழந்தை இல்லாது இருந்தார். ஒருநாள், கனவில் இயற்கை எழில் சூழ்ந்த ஆற்றின் கரையில் பசு ஒன்று பால் வார்த்து நிற்கும் அதிசய காட்சியை கண்டார். பின்னர் ஆருடம் கேட்டு தெரிந்து கொண்டு ஆலயம் கட்டினார். அதன்பிறகு குழந்தைச் செல்வங்கள் பெற்றார். குடும்பத்துடன் ஆலயத்திற்கு வந்து, விழாக்கள் நடத்தினார். ஆலயத்திற்கு அருள்கொடைகள் பல வழங்கியிருக்கிறார்.
கோவில் அருகில் வள்ளியாறு
ஆற்று மீன்களுக்கு உணவிடுதல்
வள்ளியாற்றங்கரையில் ஆலயம் அமைந்துள்ளது. பக்தர்கள் ஆற்றில் நீராடி குளித்துவிட்டு இறைவனை வழிபடும் தன்மையில் உள்ளது. ஆலயத்தின் அருகில் கோவில் குளம் காணப்படுகிறது. வள்ளியாறு வேளிமலையில் இருந்து புறப்பட்டு இரணியல், தளக்குலம், கோட்டவிளை வழியாக மணவாளக்குறிச்சி கடியப்பட்டணம் கடலில் கலக்கிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாது ஓடிக்கொண்டிருக்கும் சிறப்புடையது.

கோவில் வளாகத்தின் கன்னிமூலையில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் தர்மசாஸ்தா, பக்கத்தில் நாகராஜா, நாகரம்மன், சுற்றிலும் நாகர் சிலைகளை தரிசிப்போம். இவ்விடத்தின் சிறப்பாக மேலும் நாம் காண்பது தெய்வீக தன்மையுடைய அரசு, ஆல், வேம்பு ஆகிய மூன்று மரங்களையும் ஒரே இடத்தில் காணலாம். மரங்களின் காலப் பழமை கணக்கிட முடியவில்லை. வேறு எங்கும் காணக் கிடைப்பதில்லை. 9 அடிக்கு 9 அடி சதுர வடிவில் மரத்தினடியில் அமைந்துள்ளது. பீடத்தையும், பீடத்தின் அடியில் நிற்கும் மரங்களையும் 3 முறை நாம் சுற்றி வருவது என்பது 108 அடி சுற்றி வருவதை குறிக்கும்.
ஒரே இடத்தில்  ஆல், அரசு, வேம்பு மரங்கள் மற்றும்
தர்மசாஸ்தா , நாகராஜா 
9 + 9 + 9 + 9 = 36 அடி ஒரு சுற்று
36 x 3 = 108 அடி மூன்று சுற்று
தினமும் காலை 6.00 மணிக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தர்மசாஸ்தா மற்றும் நாகருக்கு சிறப்பு வழிபாடு காலையில் நடைபெறும். செவ்வாய் தோஷம் மற்றும் நாகதோஷம் உடையவர்கள் பிள்ளைச்செல்வம் கிடைக்கப் பெறாமல், விரும்புகின்ற பெண்கள்,தாய்மார்கள் சிறப்பு வழிபாடுகள் செய்வர். மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்து மனம் குளிர்ச்சி அடைவார்கள். பலனடைந்தவர்கள் பலர் உண்டு.
பங்குனி உத்திரம், சித்திரை, விஷூ, திருவோணம் ஆகிய சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஆனதும், ஐயப்பப் பக்தர்கள் ஆற்றில், அதிகாலையில், மாலை நேரத்தில், இரவில் குளிப்பதும், மாலை அணிவதும், கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றி வைத்து ஐயப்ப சரணம், சாமி சரணம் சொல்வதும் கேட்டு கொண்டேயிருக்கும். மாலை அணிந்து விரதம் இருந்து மகர ஜோதி காணச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை குருசுவாமி தலைமையில் வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

ஐயப்ப பக்தர்கள் புனிதமான தெய்வீக தன்மை நிறைந்து காணப்படும் இவ்விடத்தில் வைத்து இருமுடிக் கட்டி சபரிமலை சென்று வருகிறார்கள். எத்தனையோ ஆண்டுகளாக பக்தர்கள் சென்று வருகிறார்கள், இதுநாள் வரை ஏதம் ஏதும் வந்ததில்லை. ஆலயத்தில் நடைபெறும் மார்கழி திருவாதிரை திருவிழாவின் இரண்டாம் நாள் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குடும்பத்தாருடன் வந்திருந்து, அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை கண்டு வழிபட்டு பிரசாதம் பெற்று மகிழ்வார்கள்.

நாம் இனி கோபுர தரிசனம் செல்வோம்... கோபுர தரிசனம் கோடி புண்ணியம்...
கோவில் கோபுரம்
கோவில் கிழக்கு திசை பார்த்தவண்ணம் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் மேல் கிழக்கு திசையில் சிவன் யானையின் மீதிருக்கும் சிலை வடிவம், அதன் கீழ் நந்தியின் மேல் சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கும் காட்சி, அம்மை அப்பனை கண்டு வழிபடும் நிலையில் உள்ளது. 
யானை மீது சிவன் அமர்ந்திருக்கும் காட்சி
நாம் கோவிலை வலம் வருவோம். கோபுரத்தின் தென்பகுதியில் தெற்குத் திசையைப் பார்த்த வண்ணம் தட்சிணா மூர்த்தி குருவாக அமர்ந்து காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.குருவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. அன்று பக்தர்கள் குருவருள் இருந்தால் தான் இறைவன் திருவருள் கிடைக்கும். குருபார்வை கோடி தன்மை தரும் என்று எண்ணி நம்பிக்கையுடன் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளை அழைத்து வந்து குரு மந்திரம் சொல்லி பக்தியுடன் வழிபடுவார்கள். சுண்டல், கடலை பிரசாதமாக வழங்குவார்கள்.
நரசிங்கர் அவதாரம் 
தட்சிணாமூர்த்தி சிலையின் கீழ் சிவபெருமான் தலையில் கங்கை நதியை சுமந்து கங்காதரராக களங்கம் ஒரு சிறுதும் இல்லாத மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடி சந்திர சேகராரராகவும் காட்சி தருகிறார். வானத்தில் ஓடிக்கொண்டிருந்த வாண நதி என்று அழைக்கப்பட்ட கங்கை நதியை பூமியில் ஓடி வளம் சேர்ப்பாய் வா என்று மண்ணுலகோர் அழைத்தனர். நான் வருவதாக இல்லை. அதையும் மீறி நான் வருவதாக இருந்தால், என் வேகத்தை யார் தாங்கி கொள்வது என்று சொன்னது கேட்டவர்களும், தங்கள் குறையை சிவபெருமானிடம் கூறினார். சிவ பெருமானும் கங்கையை அழைத்து கேட்டார்.
பிரம்மன் 
சம்மதித்த கங்கை நதியோ என் வேகத்தை யார் தாங்கி கொள்வார்கள் என்று சொன்னது. அதற்கு சிவபெருமான் நான் தாங்கி கொள்கிறேன் என்று தலையை காண்பித்தார். கங்கையும் சிவபெருமானின் தலையில் வந்து விழுந்தது. உடனே சிவபெருமானின் சடைமுடியுடன் சுருண்டு சுருண்டு வளர்ந்து கொண்டே போனதாம். கங்கை நதி தண்ணீர் சிவபெருமானின் சடைமுடியில் சிக்கி தவித்து வெளியே வர முடியாமல் ஆனது. கங்கா தேவியும், எனது ஆணவம் குறைந்தது, நான் இனி அமைதியாக ஓடுகிறேன் என்று சொல்லி ஓடிக்கொண்டிருக்கிறது,. எல்லாம் வல்ல இறைவன் முன் நமது ஆணவம் தோற்றுவிடும்.
சந்திரனை தலையில் சூடியிருப்பது ஏன்? சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணமாக சந்திரனின் கலை நாளும் தேய்ந்து கொண்டே இருந்தது. அப்போது சந்திரன் நமக்கு சிவமே கதி என்று நினைத்து சிவன் காலில் வந்து வீழ்ந்தது. சரணாகதி அடைந்தான். காலில் விழுந்த சந்திரனை தலையில் எடுத்து வைத்து வாழ்வளித்தார். சிவபெருமானின் காலில் விழுந்து சரணாகதி அடைத்து விட்டாலே போதும். நாம் எதிர்பார்க்காத நினைத்து கூட பார்க்க முடியாத உயர்ந்த நிலையை அவர் நமக்கு தருவார்.
கோபுரத்தின் மேற்கில் நரசிங்க வடிவம் கொண்டு நரசிங்க மூர்த்தி காட்சி தருகிறார். சிவனை வழிபடும் சைவர்களும், வைணவர்கள் வழிபடும் கடவுளாம் மகாவிஷ்ணுவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்துள்ளார்கள். பக்தன் பக்த பிரகலாதனுக்கு காட்சி கொடுப்பதற்காகவும், எங்கும் நிறைந்த பரம்பொருள் இறைவன் துரும்பிலும், தூணிலும் எங்கும் எதிலுமிருப்பார்.
நரசிங்க வடிவத்துடன், இரணியனைக் கொன்ற அந்த கோப நிலைக் கண்டவர்கள் அஞ்சி நடுங்கி விட்டார்கள். அப்போது அவர் எதிரே சிவன் வரவும், அவர் நிலை கண்டு கோபம் தணிந்தது. சாந்த நிலையினை அடைந்தார். நரசிங்க மூர்த்தி சிலையின் கீழ் திருமால், நின்ற கோலத்தில் அருகில் ஸ்ரீதேவி பூதேவி நின்ற கோலத்திலும் அழகாக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோதண்டம் வில்லை ஏந்தி நிற்கும் கோதண்ட ராமன் சிலையும், ஆஞ்சநேயன் தலையில் கைகளை கூப்பி ராமனை வணங்குவது போன்ற சிலைகள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாலகிருஷ்ணன் 
கோபுரத்தின் வடக்கு பகுதியில் மேலே பிரம்மதேவன் சதுர்முகத்தொடு அமர்ந்திருக்கும் காட்சியை காணலாம். அதன் கீழ் கண்ணன் மரத்தின் மேல் இருந்து கையில் புல்லாங்குழலுடன் சுற்றிலும் கோபியர் பெண்கள் நிற்கும் காட்சியும் உள்ளது. அருகில் குருவாயூர் கண்ணன் அப்படியே நிற்கின்ற நிலையில் கண்ணன் காட்சி கண்ணையும், கருத்தையும் கவரும்.
தீப லெட்சுமி
ஆலயத்தின் உள்செல்ல நாம் ஆயத்தமாவோம். இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டு கல் தூண்களில் தீப லெட்சுமி சிலைகள் கையில் விளக்குடன் சிற்ப சாஸ்திர விதிப்படி அமைக்கப்பட்டுள்ளன. இடப்பக்கத்தில் நிற்கும் தூணில் விநாயகர் சிலை உள்ளது. தொட்டு வணங்கி கோவிலின் உள்ளே செல்ல, தூணின் மேல் அன்னப்பறவை சிவனைக் காண விரும்புவது போல் உள்ளது. பக்தர்களாகிய நாமும் இறைவனைத் தேடிச் செல்வதை நினைவு படுத்துவதாக உள்ளது.
கோவிலுக்கு செல்லும் நான்கு படிகட்டுகள் 
தொடர்ந்து தாய் கோவில் உள்ளே செல்லலாம். நான்கு படிகள் உள்ளன. அதன் மீதே கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு படிகளும் நான்கு வேதங்கள், நான் மறை நாயனே சிவன்.
கோவில் நடை வடக்கே சிறிது சரிந்து இருக்கும் காட்சி
கோவில் திருநடை பக்தர்கள் பணிவாக வந்து வழிபட நடை உயரத்தில் குறைந்தும், கிழக்கு நடை வடக்கில் சிறிது சரிந்தும் காணப்படுவதை காணலாம். இதுவும் சிவன் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்வானது என்பதை காட்டுவதாக உள்ளது.

கோவிலின் உள் சென்றதும், நாம் கண்டு வழிபட வேண்டியவர் வலம்புரி விநாயகர் வேண்டுவோருக்கு மனமறிந்து வேண்டியவைகளையும் அள்ளித் தருபவர் நம் சங்கடங்களைத் தீர்த்து வைப்பவர் தினமும் வழிபாடு நடைபெறும். குறிப்பாக சங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தி சங்கடகர சதுர்த்தி தினத்தில் மாலை ஆறு மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தில் வெள்ளிமலை அருள்மிகு பால சுப்பிரமணியர் கோவிலிலிருந்து புறப்படும் குழந்தைகள் பவனி கரைகண்டேஷ்வரம் கோவிலில் வந்து நிறைவு பெறும். அன்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து குழந்தைகளுக்கு கொழுக்கட்டையும் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
மகாதேவர் கோவில் கொண்டிருக்கும் கருவறையை சுற்றி வழிபட உட்பிரகாரம் உள்ளது. கருவறையை மூன்று முறை முறையாக சுற்று வந்ததும், நாம் வழிபட வேண்டியது நந்தியை. நந்தியின் அனுமதி பெற்று சிவபெருமானை வழிபடுவது தான் முறை. எனவே பக்தர்கள் முதலில் நந்தீஸ்வரரை வழிபடுவார்கள். என்ன கேட்டு பெறவேண்டும் எண்ணி வருவார்களோ அதை நந்தீஸ்வரர் காதில் சொன்னாலே போதும், இன்றும் பக்தர்கள் நந்தியின் காதில் சொல்லும் காட்சியை காணலாம். மூலஸ்தானத்தில் கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் அழகாக கண்டு வழிபடுகின்றவர்களின் கண்ணையும், கருத்தையும் கவரும் விதத்தில் காட்சி தருகிறார்.
மகாதேவர் என்ற பெயருக்கு ஏற்றார் போல் மிகப்பெரிய ஆவுடையும், லிங்கமும் கன்னியாகுமரி மாவட்டத்தின் கோவில்களில் காணப்படுவதில்லை. இங்கு காணப்படும் லிங்கமே மிகவும் பெரிய லிங்கம். உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை. மூர்த்தியும் பெரியது, அதன் கீர்த்தியும் பெரியது. வலப்புறத்தில் உற்சவ மூர்த்தியும், பார்வதி தேவியும் காணப்படுகின்றனர். எல்லா வழிபாடுகளும் எல்லாருக்கும் உண்டு.
பிரதோஷ நாட்களிலும், சிவராத்திரி தினத்திலும் சிவபெருமான் விபூதி சார்த்தியும், சந்தனத்தால் முழுகாப்பு சார்த்தியும், மாலைகள் அணிந்து காணப்படும் காட்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும். அலங்கார தீபாராதனையைப் பக்தியுடன் பார்த்து வழிபடுவதும் மணியோசை கேட்பதும் நம்மை மெய்மறக்கச் செய்து நம்மை நாமே மறந்த ஒரு பக்தி பரவச நிலையை அடையச் செய்யும்.
ஆலயத்தின் இடப்புறத்தில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபட்டு வருகிறார்கள். சிவபெருமான் சொல்லும் வேலைகள் செய்வதற்கு பூதத்தான் என்ற பெயருடையவர். நாளும் வழிபாடுகள் நடைபெற்றாலும் மார்கழி திருவாதிரை நாள் திருவிழாவில் சிறப்பு வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
காசிநாத கால பைரவர் 
பைரவர் சன்னதி மிக அழகாக மண்டபத்துடன் காணப்படுகிறது. காசிநாத கால பைரவர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். வாழ்க்கையில் பலமுறை தோல்வியை சந்திக்கின்றவர்கள் பிறை அஷ்டமி நாட்களில் வந்திருந்து வழிபாடுகள் செய்து வடைமாலை சார்த்தி நன்றியை தெரிவித்து கொள்கிறார்கள். மார்கழி திருவிழாவின் போது கோவில் நடை சார்த்தப்பட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு சிறப்பாக நடைபெறும்.

பக்தர்கள் 'பைரவாய பைரவாய பாகிமாம், பைரவாய பைரவாய ரட்சமாம்' என்று பக்தியோடு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆலய மண்டபத்தின் வழியாக வீடு செல்ல திரும்பும் போது மண்டபத்தின் இரு பக்கங்களிலும் இரண்டு தூண்கள் உள்ளன. இரண்டு தூண்களில் சிங்க முகம் காணப்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவன். இங்கும் இருக்கிறான். தூணிலும் உள்ளான் என்பதை அரக்கன் இரணியனுக்கு மகன் பக்த பிரகலாதன் வழியாக காட்சி கொடுத்து காட்பித்தார்.
சிங்கமுகத் தோற்றம் 
வெளிமண்டபத்தின் தூணில் தாழம்பூ சிலை காணப்படுகிறது. நீ இறைவனுக்கு எதிராக செயல்படாதே எதிராக பேசாதே என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது. மண்டபத்தில் எல்லா தூண்களிலும் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் நம் புராணக் கதைகளை விவரிக்கின்றன. 
தாழம்பூ சிலை 
ஒரு தூணில் ஒற்றைக் காலில் நின்று ஒரு காலை மடக்கி இரண்டு கைகளையும் தலைமேல் வைத்து தொழுது கொண்டிருக்கும் அர்ச்சுனன் தவக் காட்சியுடன் ஒரு பன்றி நிற்கின்ற காட்சி. எதிர் தூணில் சிவபெருமான் கையில் வில்லும், அம்புங்கொண்டும் நிற்கின்ற சிலை காணப்படுகிறது. இதன் விளக்கம்...
அர்ஜுனன் தவக்கோலம் மற்றும் வேடுவர் அவதாரம் 
பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் வனவாசத்தின் பன்னிரண்டாவது ஆண்டில் கௌரவர்களை வெற்றி பெற வேண்டும். சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஒற்றைக்காலில் நின்று கடுந்தவம் செய்கின்றான். கடுந்தவத்திற்கு இரங்கிய சிவபெருமானும் கயிலை மலையிலிருந்து இறங்கி வருகிறார். எம தருமனை அழைத்து நீ பன்றியாக வரவேண்டும், நான் விடும் அம்பு உன்னைத் தொட்டுக் கொண்டிருக்கும் அடைக்கலம் கேட்டு அர்ச்சுனனிடம் செல்லவேண்டும்.
திருமால் பன்றி அவதாரம் 
நாங்கள் வேடுவர்களாக வேடங்கொண்டு வருவோம் என்று கூறி சிவன், திருமால், பிரம்மன், பார்வதி, விநாயகர், முருகன் என எல்லோரும் வந்தனர். பன்றி அடைக்கலம் கேட்டு அர்ச்சுனனிடம் சென்றது. வேடனாக வந்த சிவபெருமான் அர்ச்சுனனிடம் பசியோடிருக்கும் நாங்கள் புசிக்க வேண்டியே பன்றி வேட்டையாடினோம். நீ செய்வது நியாயம் தானா? என்று கேட்டபோது அர்ச்சுனன் அடைக்கலம் என வந்த பன்றியை ஆதரித்தேன். பன்றியை விடமுடியாது என்றான். சிவபெருமான் பாசுபதாஸ்திரம் அளித்தார்.
முருகன் மயிலுடன் இருக்கும் காட்சி மற்றும்
புல்லாங்குழலுடன் கிருஷ்ணன் 
மண்டபத்தூண்களில் மயிலுடன் காட்சியளிக்கும் வெள்ளிமலை முருகன் பாற்கடல் கடைந்து அமுதம் பெற இருக்கும்போது மத்து சரிந்த போது ஆமை வந்து நிமிர்த்து நிலை நிறுத்தியதை நினைவு படுத்தும் வகையில் ஆமை வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் புல்லாங்குழலுடன் நிற்கும் சிலையும், சிவபெருமான் கால்பாதங்களைத் தேடிய பன்றியின் சிலையும், தலைமுடியை தேடிய அன்னப்பறவையின் வடிவமும் தூண்களில் இடம் பெற்றுள்ளன.
திருமால் ஆமை வடிவ காட்சி 
அன்னப்பறவை 
ஆலய வழிபாடு முடிந்து நாம் திரும்பி ஆலயத்தின் மேலே பார்க்கும் போது குரங்கு சிலை இருப்பதை காணலாம். இதன் விளக்கம், பக்தா நீ ஒரு குட்டி குரங்கு, நானோ தாய் குரங்கு என் பாசம் உனக்கு வேண்டுமெனில் குரங்கு குட்டி கண்ணை மூடி தாயை நம்புவது போல நீயும் என்னை நம்ப வேண்டும் என்பதாகும்.
குரங்கு சிலை 
ஒரே சீரான ஆறு தூண்கள்
பவள மல்லி
ஆலயத்தின் வளாகத்தில் மருத்துவ குணம் உடைய பல அபூர்வ மூலிகைச் செடிகளும் நந்தவனமும் காணப்படுகிறது. பவள மல்லி என்று அழைக்கப்படுகிற மரம ஒன்று நிற்கின்றது. அதன் பழமையை கூறமுடியவில்லை. இதன் அதிசயம் யாருமே காணமுடியாத இரவு நேரத்தில் மொட்டாகி இரவிலேயே மலர்ந்து பூமியில் விழுந்து விடும்.

கோவிலைச் சுற்றிலும் வாழ்ந்து வருகின்ற அனைத்து சமுதாய மக்களும், பக்தர்களும் ஒன்றிணைந்து ஆலய முன்னேற்ற சங்கம் அமைத்து திருவாதிரை திருவிழா, சிவராத்திரி விழா, பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மகளிர் மன்றம் அமைத்து திருவிளக்கு வழிபாடு மற்றும் துர்க்கா பூஜை மாதம் தோறும சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சிவசக்தி மகளிர் திருவிளக்கு வழிபாடு மன்றம், உமா மகேஸ்வரர் மகளிர் மன்றம் போன்ற மன்றங்கள் உள்ளன. ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதனால் பிள்ளைபேறு பெற்றவர்கள் உண்டு.
கோவில் முன் வாசல் 
ஆலய அலுவலகம் 
ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டுகளும், செய்திகளும்...

கரைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலின் உள் தெற்கு பக்கம் கல்வெட்டுகள் உள்ளன. இதில் முதல் கல்வெட்டில் கரைகண்டேஸ்வரர் மகாதேவருக்கு ஆதிச்சன் கோதை என்பவர் திருநந்தாவனமும் )பூஜைக்கு தேவையான பூ), திருநந்தா விளக்கும் (எண்ணெய்) அளித்ததை குறிக்கிறது. இரண்டாவது கல்வெட்டு கோவில் உள்பக்கம் உள்ளது. இதில் மகாதேவருக்கு ஸ்ரீபலி செலவிற்கு முப்பதே கால அச்சு ஆதிச்சன் கோதை அளித்ததை குறிக்கிறது.
கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள் 
மூன்றாம் கல்வெட்டு கோவில் ரிஷப மண்டபத்தின் தெற்கு பக்கச் சுவரில் அமைந்துள்ளது. கரைகண்டேஸ்வரர் சித்திரை திருநாளில், நீராடுவதற்கு அந்நாளில் திருநாடகம் நடத்துவதற்கும் பெரும்பற்றபுலியூர் சிவனுக்கினியார் என்பார் நெல் அளித்ததை குறிக்கிறது. நான்காம் கல்வெட்டு கரைகண்டேஷ்வரம் மேற்கு பக்கச்சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி.1432 ஆம் ஆண்டு சித்திரை திங்கள் 26 ஆம் நாள் இக்கோவில் திருப்பணி செய்து பெரு நீராடி நடக்கப் பெற்றது, என்பதை குறிக்கிறது.

ஐந்தாவது கல்வெட்டு மகாதேவர் கோவிலில் மணி மண்டபத்தின் வடக்கு பக்கத்தில் குறுக்குப்பட்டி கல்வெட்டில் காணப்படுகிறது. பெரும்பற்றப் புலியூரை சேர்ந்த சிவனுக்கினியார் என்பார் கரைகண்டேஸ்வரமுடைய நாயனார் கோயிலில் சோபான மண்டபம் கட்டுவித்து, கலசத்துக்கு நீர் ஆட்டுவித்து, வழிபாட்டுக்கும், ஸ்ரீபலிக்கும், திருவிளக்குக்கும் நிலம் அளித்ததை குறிக்கிறது. ஆறாம் கல்வெட்டு நுழைவாயிலின் கிழக்கு பக்கத் தூநோல் காணப்படுகிறது. கரைகண்டேஸ்வர மகாதேவருக்கு அர்த்தயாமத் திருவாமிர்து செய்தளிப்பதர்காக நம்பி கணபதி வந்பானுக்கு திருநந்திக்கரைப் பெருமக்களும் கோயிலை நிர்வகிப்பவர்களும் சேர்ந்து நிலம் அளித்ததை குறிக்கிறது.

கரைகண்டேஸ்வரம் மகாதேவர் ஆலய ஸ்தல வரலாறு எழுதிய ஆசிரியரை பற்றி.....

த.தாணுலிங்கம் 
திருநயினார்குறிச்சி கடைவிளை ஊரில் வசித்துவரும் தெய்வத்திரு தங்கையா அவர்கள் மகன் த.தாணுலிங்கம் M.A.,M.A.,M.Com.,M.Ed.,M.Phil.,D.G.T., உதவி தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி இரணியல்.

சிவபெருமான் திருவருளால் ஐந்தாண்டுகளாக நாளும் ஆலயத்திற்கு வந்து வழிபடும் பழக்கம் உஅடையவர். என் செயலாவது யாதொன்றுமில்லை. எல்லாமே சிவன் செயல் என்று நம்புகிறேன். 'தனது மகன் சுதனையும் ஆலய வழிபாட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றார். மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று பக்தியோடு கேட்டேன்' தந்தார். M.Sc., M.Phil., Ph.D., படித்துள்ளார். மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்டேன். பல்கலைகழகத்தில் உதவிப் பேராசிரியராக பதவி தந்தார்.
ஆலய ஸ்தல வரலாறு ஆசிரியர் திரு. த.தாணுலிங்கம் 
எனவே இன்றைக்கும் என்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் நாங்கள் சிவனுக்கு அடிமையாய் வாழ்வோம்.

கரைகண்டேஸ்வரம் மகாதேவர் பற்றி கழுவன்திட்டுவிளையை சேர்ந்த திருமதி. எஸ். ஈஸ்வரி அவர்கள் எழுதிய பாடல் பின்வருமாறு...

 'கறைகண்டேன் கோவிலுக்கு வாருங்களேன்
உங்கள் கவலைகள் பறந்தோடும் பாருங்களேன்..

(2) எந்நாளும் சிவமந்திரம் சொல்லுங்களேன்
(2) ஏகாந்தன் அருள் பெறவே வாருங்களேன்... (கறை)

வள்ளியாற்றின் கறை ஓரம அமர்ந்திருக்கின்றான்
சொல்லும் சிவமந்திரம் தனைக் கேட்டு அருள்கின்றான்.....(வள்ளியாற்றின்)

(2) கொன்றை மாலை அணிந்தோனை பாருங்களேன்
(2) குறைதீர்த்து மகிழ்விபான் வாருங்களேன்... (குறைதீர்த்து)

கறை கண்டேன் கோவிலுக்கு வாருங்களேன்..

பிறைசூடும் பெருமானை பாருங்களேன் - என்றும்
பிறப்பற்ற நந்தியினை வணங்குங்களேன்.... (பிறைசூடும்)

(2) நெற்றிக்கண் உடையோனை நினைத்திருந்தால் 
(2) நித்திய வாழ்வுதனை அடைவீர்களே

கறை கண்டேன் கோவிலுக்கு வாருங்களேன் - உங்கள் 
கவலைகள் பறந்தோடும் பாருங்களேன்...
உங்கள் கவலைகள் பறந்தோடும் பாருங்களேன்...
உங்கள் கவலைகள் பறந்தோடும் பாருங்களேன்...'


எஸ்.ஈஸ்வரி,
க/பெ. சண்முகவேல்,
18/41D, பொட்டல்குழி,
கழுவன்திட்டுவிளை,
அம்மாண்டிவிளை அஞ்சல் - 929204,
கன்னியாகுமரி மாவட்டம்.
கைபேசி- 7708860942.

5 Comments

  1. அ.ஸ்ரீ விஜயன்
    -----------------------
    திருநயினார்குறிச்சி பற்றிய தகவல் படித்தேன். மிகவும் நன்றாக படைக்கப்பட்டுள்ளது.ஆசிரியரின் திறமையும், ஈடுபாடும் அருமை. வழி, வாசல், கோபுரம், விமானம், குளம், மரம், உற்சவம், இத்யாதி என்று அனைத்தையும் விளக்கியுள்ளார். படங்களோடு செய்தியும் தகவலும் தரப்பட்டுள்ளதால், நேரில் சென்று பார்த்த ஒரு அனுபவம் ஏற்படுகிறது.

    திருக்குறள் ஆசிரியரை நயினார் என்று அழைப்பவர் உள்ளனர். நயினார் என்றால் சமணர் என்று பொருள். திருக்குறளும், நாலடியாரும் கொள்கையிலும், நன்னெறி கூறுவதிலும், வடிவமைப்பிலும் ஒரே மாதிரி உள்ளவை.

    திருக்குறள் ஈரடி, நாலடியார் நாலடி.
    நால்டியார் சமண முனிவரால்/ முனிவர்களால் இயற்றப் பட்டுள்ளது. திருக்குறளும் சமண முனிவரால்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது பல சான்றோர்களின் கருத்து.

    மேலே உள்ள கட்டுரையைப் பார்க்கும் பொழுது, திருக்குறள் ஆசிரியர் திருவள்ளுவர் எனப்படும் நயினார் இந்த ஊரில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது ஐயமற அறிய முடிகிறது.

    ReplyDelete
  2. மிகவும் பயன் உள்ள தகவல் ..........

    ReplyDelete
  3. பல ஆண்டுகளாக மண்ணில் புதைந்திருந்த விதை மேல், மழை தண்ணிர் பட்ட உடன் எப்படி பூமியை பிழந்து மரமாக மாறுகிறதோ அது போல
    பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த மகாதேவர் ஆலயம், இன்று சில சான்றோர்களின் ஈடு இணையற்ற தன்னலமற்ற தொண்டால், இவ்வளவு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
    அதில் ஒருவர் தான் இந்த கட்டுரையின் ஆசிரியர். மேலும்
    ஆலயபணிகளுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கும் சு. நாகராஜன் அவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.

    ReplyDelete
  4. நையினார் என்பது வள்ளுவ இனத்தினர் தங்கள் பெயருடன் நையினார் என்று சேர்த்து எழுதுவது வழக்கம் .
    திருவள்ளுவர் கரும தலைவர் (தலைமை செயலாளர் ) என்ற ஒப்பற்ற தொழிலை செய்து அரசனுக்கும் மக்களுக்கும் ஆலோசனை கூறி சட்ட திட்டங்களை வகுத்து கொடுத்து மன்னருக்கு எல்லாம் குலகுருவாக இருந்து முடி சூட்டும் தகுதி பெற்ற வள்ளுவ இனத்தில் உதித்ததால் அவர் நயினார் என்றும் அழைக்க பெற்றார். வள்ளுவ இனத்தினர் பிரபுக்களாகவும் குறுநில மன்னர்களாகவும் இருந்துள்ளனர் திருவள்ளுவர் குறிஞ்சி நிலத்தின் குறுநில மன்னர் ஆகையால் திரு வள்ளுவ குறிச்சி அதாவது திரு நயினார் குறிச்சி ஆனது . அங்கு ஓடும் வள்ளுவன் ஆறு வள்ளுவ ஆறு ஆகி வள்ளியாறு ஆனது .திரு வள்ளுவன் கோடு விலவன் கோடு ஆனது..

    அன்புடன் -பேரளம் பிரகாஷ்

    ReplyDelete
Previous News Next News