ஆரல்வாய்மொழி
மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை திருத்தலம்
– ஒரு சிறப்பு பார்வை
இருப்பிடம்:
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஆரல்வாய்மொழி அருகே காற்றாடிமலையில் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை (DevasahayamPillai) திருக்கோவில் அமைந்துள்ளது. ஆரல்வாய்மொழி மெயின் ரோட்டில் (NH Road) இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
நாகர்கோவில்-திருநெல்வேலி ஹை-ரோடு |
தேவசகாயம் மவுண்ட் செல்லும் சாலை |
தேவசகாயம்பிள்ளை திருத்தலம் செல்லும் பாதையில் வைக்கப்பட்ட போர்டு |
வரலாறு (History of DevasahayamPillai):
குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712-ல், ஏப்ரல் 23ஆம் நாள் நாயர் குலத்தில் பிறந்தவர்தான் நீலகண்ட பிள்ளை என்கின்ற தேவசகாயம் பிள்ளை. இவர் கத்தோலிக்க கிறித்தவர்களால் ஒரு மறைச்சாட்சியாக (martyr) கருதப்படுகின்றார். குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க அமைப்பாகிய கோட்டாறு மறைமாவட்ட கிறித்தவர்கள் இவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இவர் 1752ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் அன்றைய திருவாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி சுட்டுக் கொல்லப்பட்டார். தேவசகாயம் பிள்ளை இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. அவர் இறந்த இடத்திற்குச் சென்று மக்கள் இறைவேண்டல் நடத்தத் தொடங்கினார்கள். இவ்வாறு, அதிகாரப்பூர்வமாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்கள் பார்வையிலும் செயல்பாட்டிலும் அவர் மறைச்சாட்சியாகவே கருதப்பட்டார்.
மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை, குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமஸ்கிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களை பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார். அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது.
அரசர் மார்த்தாண்ட வர்மா மற்றும் இஸ்தாக்கியூஸ் பெனடிக்ட் டிலனாய் |
1741-ல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டச்சு படைகள் மார்தண்டவர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. அதன் படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தை சார்ந்த பெநேடிச்டுஸ் தே டிலனாய் (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறைபிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இன்றும் குளச்சல் பகுதியில் இருக்கிறது.
நாளடைவில் இந்த டிலன்னாய் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதை கண்ட அவர் நலம் விசாரித்தார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசம் அடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லி கிறித்தவத்தை அவருக்கு அறிமுக படுத்தினார். நாளடைவில் கிறித்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக விருப்பம் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த ஜோவான்னி பத்தீஸ்தா பத்தேரி (Giovanni Battista Batteri) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள்தருகின்ற "இலாசர்" (Lazarus) என்னும் பெயரைச் சூட்டினார். கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் பலரிடமும் இயேசு கிறித்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆனார்.
இவர் இந்து பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராக பல பொய் குற்றச்சாட்டுகள் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்பந்தித்தார்கள். மேலும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். கிறிஸ்துவுக்காக தனது உயிரையும் கொடுக்க அணியமான தேவசகாயம் தம் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாக கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.
14, சனவரி, 1752-ஆம் ஆண்டு தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டிலேயே எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் கோவிலில் அடக்கம் செய்தனர்.
தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ மத நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் (Clemens Joseph) என்பவர் 1756-ல் உரோமையில் திருத்தந்தையிடம் கையளித்தார். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையும் அதன் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.
பின்னர் 1993-ல் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிக்க முயற்சி மேற்கொள்வது பொருத்தம் என்று கருதி அதற்கான நடவடிக்கைகளை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் தொடங்கினார். அவரின் வேண்டுகோள்படி, 2004ஆம் ஆண்டு தமிழ் நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரோமைத் தலைமைப் பீடத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. இதன் முதல் படியாக இவர் இறை பணியாளர் என அறிவிக்கப்பட்டார்.
ஜூன் 2012-ல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரை வணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தினார். கேரளத்தைச் சார்ந்த புத்தன்பரம்பில் தொம்மச்சன் என்பவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையும் துறவறத்தைத் தழுவியவர்கள் அல்ல, மாறாக பொதுநிலையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைச்சாட்சி பட்டம் அளிக்கும் விழா
2012ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 2ஆம் நாள், தேவசகாயம் பிள்ளை அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மைக் கோவிலில் நடக்கவிருக்கின்ற சிறப்பு நிகழ்ச்சியின்போது தேவசகாயம் பிள்ளை "மறைச்சாட்சி" (martyr) என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். அப்போது அவருக்கு "முத்திப்பேறு பெற்றவர்" (Blessed) என்னும் பட்டமும் அளிக்கப்படும். இச்சிறப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்த கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் உரோமையிலிருந்து கோட்டாற்றுக்கு வருகை தரவிருக்கின்றார். அந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் பல கத்தோலிக்க சமயத் தலைவர்களும் மக்களும் கலந்துகொள்வர். இச்செய்தியைக் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் வெளியிட்டுள்ளார்.
தேவசகாயம் மவுண்டில் பார்க்கவேண்டிய இடங்கள்:
· தூய வியாகுல அன்னை ஆலயம்
· தூய வியாகுல அன்னை சிற்றாலயம்
· இறை ஊழியர் தேவசகாயம் பிள்ளை அருங்காட்சியகம்
· புனித மலை சிலுவைப்பாதை
· தேவா சதுக்கம் (இறை ஊழியர் முட்டூன்றி ஜெபித்த இடம்)
· மனியடிச்சான் பாறை
· இறை ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் கல் சிலுவை
· இறை ஊழியர் சுட்டுப்பட்டு, உடல் விழுந்த இடத்தில் மரசிலுவை
· கெபி (காசு ஒட்டும் இடம்)
· செபமாலை பூங்கா
· கண்ணீர்ப் பாறை
· ஊமைப்பாறை
· மஞ்சள் கிளை கொண்ட அதிசய ஆலமரம்
· ஒரே கல்லிலான திருக்கொடி மரம்
· கோட்டக்கரையில் இறை ஊழியர் அடைக்கப்பட்ட சிறைச்சாலை
தேவசகாயம் பிள்ளை திருத்தலம் செல்லும் பாதை |
வியாகுல அன்னை ஆலயத்தின் எழில்மிகு தோற்றம் |
வியாகுல அன்னை சிற்றாலயம் செல்லும் படிக்கட்டி |
வியாகுல அன்னை சிற்றாலயத்தில் உள்ள சொரூபம் |
இயேசு சிலுவை சுமந்த சொரூப காட்சி |
மலைக்கோவில் செல்லும் படிக்கட்டுகள் |
மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை முழங்காலிட்டு ஜெபித்த இடம் |
முழங்காலிட்டு ஜெபித்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு |
முழங்காலிட்டு ஜெபித்த இடத்தில் பாறையில் படிந்துள்ள முழங்கால் தடம் |
தேவசகாயம் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டு |
தேவசகாயம் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இடம் |
துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள கல் சிலுவை |
துப்பாக்கியால் சுடப்பட்டு, உடல் விழுந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு |
தேவசகாயம் பிள்ளை துப்பாகியால் சுட்டுகொல்லப்பட்டு, உடல் வீழ்ந்து கிடந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள மரசிலுவை |
மணியடிச்சான் பாறைக்கு செல்லும் பாதையில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு |
மலையில் செல்லும்போது பக்கத்தில் சொரூபம் வைக்க அமைக்கப்பட்டுள்ள சிறிய கூண்டு போன்ற அமைப்பு |
பாறையில் செதுக்கப்பட்ட பைபிள் மற்றும் இயேசு சிலை |
மணியடிச்சான் பாறை. இங்கு 3 கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளை எடுத்து மேற்காணப்படும் பாறையில் அடிக்கும் போது மணி அடிப்பது போன்ற ஓசையை கேட்கலாம் |
மலையின் மீது இருந்து பார்க்கும்போது ஆரல்வாய்மொழி நகரம் முழுவதும் காணலாம் |
மலையின் உச்சியில் காணப்படும் ஏசுநாதர் சிலை |
கோவிலில் தங்கவைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட நபர். காலில் சங்கிலி கட்டப்பட்டுள்ளது |
மனநலம் பாதிக்கப்பட்ட நபர். இரு கைகளிலும் 5 வாட்சுகள் கட்டியிருக்கார் |
மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வரலாற்றை குறிக்கும் பலகை |
தேவசகாயம் பிள்ளையின் அருங்காட்சியகம் |
தேவசகாயம் பிள்ளை திருத்தலம் செல்லும்
பாதை மற்றும் திருத்தல விளக்க வீடியோ
“மணவை மலர்” செய்திக்குழு
Tags:
Spritiuality