மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 26–ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் தீபாராதனை, சிறப்பு பூஜை, சமய மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று வலிய படுக்கை பூஜை ஆகும். இந்த நிகழ்ச்சி 6–ம் திருவிழாவான நேற்று நடந்தது.
இதையொட்டி காலையில் தீபாராதனையும், அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், உச்சகால பூஜையும், சிறப்பு வில்லிசையும் நடந்தது.
இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நள்ளிரவில் வலிய படுக்கை என்ற மகாபூஜை நடந்தது. அப்போது அம்மனுக்கு பல வகையான உணவு பதார்த்தங்களும், இனிப்பு வகைகளும் படைக்கப்பட்டு இருந்தன. வலிய படுக்கை பூஜையின் போது, கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தால் சரண கோஷம் எழுப்பினார்கள்.
வலிய படுக்கை பூஜையையொட்டி பருத்திவிளையில் இருந்து சந்தன குடம், களப பவனி புறப்பட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. பின்னர், உண்ணாமலை கடையில் இருந்து களப குடம் பவனி புறப்பட்டு கோவிலை வந்து சேர்ந்தது. தொடர்ந்து, குளச்சல் கணேசபுரம் அடைக்கலம் தந்த விநாயகர் கோவிலில் இருந்தும் களப பவனி நிகழ்ச்சி நடந்தது. வலியபடுக்கை பூஜையை காண்பதற்காக கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
திருவிழாவில், நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 7–ம் தேதி மதியம் 1 மணிக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.