வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி பலி

ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், (வயது 42), கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி பானு (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது ஜெயக்குமார் புதியதாக வீடு ஒன்று அந்த பகுதியில் கட்டினார். ஆனால் ஜெயக்குமாரின் தாயார் பழைய வீட்டில் வசித்து வந்தார். இதனால் தாயாருடனேயே ஜெயக்குமாரும், மனைவி, மகன்களுடன் வசித்து வந்தார்.
நேற்றிரவு ஜெயக்குமாரும், அவரது மனைவியும் ஒரு அறையில் தரையில் படுத்திருந்தனர். மகன்கள் இருவரும் மற்றொரு அறையிலும், ஜெயக்குமாரின் தாயார் இன்னொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு திடீரென வீட்டின் சுவர் இடிந்து ஜெயக்குமார், பானு ஆகியோரின் தலையில் விழுந்தது. இதில் அவர்கள் இருவரும் தலை நசுங்கி மண்ணுக்குள் புதைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு மகன்கள் இருவரும் கண் விழித்தனர். அவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தபோது தந்தையும், தாயாரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயக்குமார், பானு இருவரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அவர்களது மகன்கள் இருவரும் கதறி அழுதனர்.

இதை தொடர்ந்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கணவன்-மனைவி இருவரும் பலியானது குறித்து ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்து வழக்குப் பதிவும் செய்துள்ளனர். கணவன்-மனைவி பலியானது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதற்கிடையே பலியான ஜெயக்குமார், பானுவின் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படு கிறது. அவர்களது உறவினர்கள் அங்கு திரண்டிருந்தனர். கணவன்-மனைவி இருவரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous News Next News