மண்டைக்காடு அருகே நடுவூர்க்கரையில் சிவசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 24–ம் தேதி தொடங்கி 28–ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், தீபாராதனை, காலை 7 மணிக்கு பஜனை, முற்பகல் 11 மணிக்கு கலசபூஜை, கலசாபிஷேகம், மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு சிறப்பு அன்னதானம் போன்றவை நடைபெறும்.
25-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு பூஜை, பஜனை, திருவாசகம் முற்றோதல், மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிவசக்தி அம்மனுக்கு பூஜை, இரவு 7 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது. 26–ம் தேதி காலையில் சிவசக்தி அம்மனுக்கு பூஜை, பஜனை, மாலையில் சமய வகுப்பு மாணவ–மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகள் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
வருகிற 27–ம் தேதி காலை 7 மணிக்கு 5 யானைகள் மீது சந்தன குடம் பவனி நடக்கிறது. பவனியானது கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடையும். பவனியை நிழல்தாங்கல் நிர்வாகி கிருஷ்ணானந்தம் தொடங்கி வைக்கிறார். இதில் கோவில் நிர்வாக தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவலிங்கம் உள்பட பலர் முன்னிலை வகிக்கிறார்கள். காலை 9 மணிக்கு சிறப்பு பஜனை, மதியம் 2 மணிக்கு குலைவாழைக்கு நேரியல் போடுதல், மாலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான 28–ம் தேதி காலை கடலுக்கு சென்று புனித நீர் கொண்டு வருதல், தொடர்ந்து சிறப்பு வழிபாடு, பூஜை, மதியம் 1 மணிக்கு சத்சங்கம், மாலையில் இசைப்பட்டிமன்றம், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் போன்றவை நடக்கிறது. இரவு சிறப்பு பூஜையும், ஒடுக்கு பூஜையும் நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
Tags:
Surrounded Area