மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 26–ம் தேதி தொடங்கியது. நேற்று 9–ம் திருவிழா நடைபெற்றது. நேற்று காலையில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 10 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது களப பவனி வருதலும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடந்தது.
இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடந்தது. நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் பாரதி தலைமை தாங்கினார். தீவட்டி கமிட்டி தலைவர் ராஜகுமார், செயலாளர் செல்லம், பொருளாளர் விஜயரங்கன், பா.ஜனதா கட்சி மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் முருகன், தீவட்டி கமிட்டி உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருமன்கூடல் தொழிலதிபர் குமார் முதல் விளக்கினை ஏற்றிவைத்தார்.
பின்னர் தீவட்டி ஊர்வலம் கோவிலை சுற்றிவலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் எதிரே உள்ள லெட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை ரோடு, சாஸ்தாகோவில் செல்லும் சாலை, கடற்கரை சாலை ஆகிய இடங்களிலும், அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கடலில் கால்நனைத்துவிட்டு வந்து அம்மனை வழிபட்டனர்.
10–ம் திருவிழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். கோவில் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.