நாகர்கோவில் பொற்றையடி மருந்துவாழ் மலை – ஸ்ரீஹனுமான் மலை கோவில் – ஆன்மிக மலை பயணம்

நாகர்கோவில் பொற்றையடி மருந்துவாழ் மலை – ஸ்ரீஹனுமான் மலை கோவில் – ஆன்மிக மலை பயணம்

கன்னியாகுமரி மாவட்டம் எழில்கொஞ்சம் இயற்கை வளத்துடன் காணப்படும் தமிழகத்தின் கடைகோடி மாவட்டம். இந்த மாவட்டத்தில் கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, சிதறால் மலை கோவில், மாத்தூர் தொட்டிப்பாலம், முட்டம் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை என எங்கு பார்த்தாலும் சுற்றுலாத்தலங்கள் நிரம்பி காணப்படுகிறது.

அதேபோல் ஆன்மிக தலங்கள் ஏராளம். தமிழர்களின் ஐவகை நிலங்களில் 4 நிலங்களை தன்னுள் கொண்டுள்ளது. அதாவது மலை சார்ந்த பகுதி, காடு சார்ந்த பகுதி, வயல் சார்ந்த பகுதி, நெய்தல் பகுதியான கடற்கரை பகுதி ஆகியவற்றை பெற்றுள்ள சிறப்பு மிக்க மாவட்டமாகும்.

இந்த மாவட்டத்தில் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள மிகமுக்கிய புனிதத்தலமாக விளங்குவது, நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது மருத்துவாழ்மலை எனும் ஆன்மிக தலம். இந்த பொற்றையடி பகுதிலேயே ஸ்ரீசாய்பாபா கோவில் மிகபிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

மருந்துவாழ்மலை – இராமாயண வரலாறு:
மருந்துவாழ்மலை உச்சியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மருந்துவாழ் மலைக்கும், அனுமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி,

இராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு சென்றபின்னர், அவரை மீட்பதற்காக இராமன், இலட்சுமணன் மற்றும் வானரங்களுடன் இலங்கையில் பெரிய போர் நடந்தது. அந்த சமயத்தில் இராவணனின் தம்பி கும்பகர்ணனுடன் போர் நடந்த சமயம். கும்பகர்ணன் கண்ணில்பட்ட குரங்குகளை (வானரங்கள்) எல்லாம் கொன்று வீழ்த்தினான். குரங்கு படைகளுக்கு பேரழிவு ஏற்படுவதை கண்ட இராமன், கும்பகர்ணனை நோக்கி சென்றார். கும்பகர்ணனும் இராமனை நோக்கி ஆரவாரத்துடன் வந்தான்.

இதில் இருவருக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. இராமன், தன் அம்புகளால் கும்பகர்ணனின் அம்புகள் அனைத்தையும் வீழ்த்தினார். கூரிய அம்புகளால் அவன் கைகளையும், கால்களையும் துண்டித்தார். ஆனாலும் வலிமை குறையாத கும்பகர்ணன் தன் வாயாலேயே குரங்குகளை பிடித்து உண்டான். இதனால் இராமன், ஓர் அம்பால் அவன் தலையை துண்டித்தார்.

கும்பகர்ணன் மாண்டான் என்பதை கேள்விபட்ட இராவணன் அழுது புலம்பினான். அங்கு வந்த இந்திரஜித் தந்தையின் நிலையை பார்த்தான். தந்தையே! நான் இருக்கும்போது நீங்கள் கலங்கலாமா? இப்பொழுதே போர்க்களம் செல்கிறேன். இராமனையுன், இலக்குவனையும் கொன்றுவிட்டு வருகிறேன். என் வீரத்தை பாருங்கள்” என்று தேரில் ஏறினான்.

போர்க்களத்தில் அவனுக்கும் குரங்கு படைகளுக்கும் நீண்ட போர் நடந்தது. அவனால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. மாயத்தால்தான் இவர்களை வெல்ல வேண்டும் என்று நினைத்தான். தன்னை காணாதபடி வானத்தில் மறைந்தான். “எங்கே மறைந்தாலும் விடமாட்டோம்” என்று குரங்குகள் கத்தின. வானத்தை நோக்கி எல்லா திசைகளிலும் அம்புகளை எய்தன. எந்த அம்பும் அவனை தாக்கவில்லை.

அவர்கள் மீது இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை எய்தான். அந்த அம்பால் போர்க்களத்தில் இருந்த அனைவரும் தாக்கப்பட்டனர். இராம, இலக்குவர் உட்பட எல்லோரும் மயக்கம் அடைந்து வீழ்ந்தனர். அரக்கனகிய வீடணனை அந்த அம்பு ஒன்றும் செய்யவில்லை. வெளியே சென்றிருந்த ஜாம்பவானும், அனுமானும் போர்க்களம் வந்தார்கள். இராம, இலக்குவனர்களும், குரங்குகளும் இறந்து கிடப்பதாக நினைத்தார்கள்.

“இனி நாங்கள் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்? நாங்களும் உயிரைப் போக்கி கொள்கிறோம்” என்று அழுது புலம்பினர். அவர்களை பார்த்து வீடணன், “இவர்கள் யாரும் இறக்கவில்லை. பிரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட்டு மயக்கமாகி கிடக்கிறார்கள்” என்றார்.

மேலும், “ஏழு கடல்களுக்கு அப்பால் சஞ்சீவி மலை உள்ளது. அங்கே மின்னலைப் போல ஒளி வீசும் மூலிகை செடிகள் உள்ளன. அந்த மூலிகையின் மணம் பட்டால் போதும் இவர்கள் பிழைத்து கொள்வார்கள். தாமதம் செய்யக்கூடாது. விரைவில் அந்த மூலிகை செடிகளை கொண்டுவர வேண்டும்” என்றார்.

“இப்பொழுதே கொண்டு வருகிறேன்” என்று அனுமான் வேகமாக வானத்தில் பறந்து சஞ்சீவி மலையை அடைந்தார். அங்கிருந்த செடிகளை எல்லாம் பார்த்தார். மின்னலைப் போல நிறைய செடிகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. மூலிகை செடியை கண்டுபிடிக்க முடியாமல் திணறினார். “என்ன செய்வது? எது மூலிகை செடி என்று தெரியவில்லையே, எப்படி எல்லோரையும் காப்பாற்றுவது? என்று சிந்தித்தார்.

நல்ல வழி ஒன்று தோன்றியது, தன் வலிமையை பயன்படுத்தி சஞ்சீவி மலையை வேரோடு பிடுங்கினார். அதைத் தூக்கி கொண்டு வானத்தில் வேகமாக பறந்தார். அவ்வாறு வரும் வழியில் அந்த சஞ்சீவி மலையில் இருந்து ஒரு சிறு பகுதி உடைந்து விழுத்தது. உடைந்த விழுந்த அந்த பகுதிதான் மருந்துவாழ் மலை என்று கூறப்படுகிறது. பின்னர் மலையுடன் போர்க்களத்தில் இறங்கினார் அனுமான். மூலிகையின் மணம் எங்கும் பரவியது. இராமனும், இலக்குவனும் குரங்குகளும் உயிர் பெற்று எழுந்தார்கள்.
நன்றி : இராமாயணம், பாலாஜி நொட்புக்ஸ், சிவகாசி)

மருந்துவாழ்மலை – குறிப்புகள்
1. 12-04-1986 –ல் மருந்துவாழ் மலையில் 1800 அடி உயரம வரை வழிப்பாதைகள் திருத்தம் செய்யப்பட்டது.
2. 15-05-1987-ல் சிவசிவா ஞானமடம் 1200 அடிக்குமேல் உயரம்வரை 3 அறைகள் பொதுமக்களுக்கு பாராயணம் செய்ய கட்டப்பட்டது.
3. 14-02-1989-ல் மலையின் அடிவாரத்தில் 200 பேர் இருந்து தியானம் செய்ய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
4. மருந்துவாழ் மலையில் அனுமான் சுனையை சீர்திருத்தம் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.
5. 1994ஆம் ஆண்டு நம்பர் 96 மருந்துவாழ் மலை அகில உலக சான்றோர் சங்கம் பதிவு செய்யப்பட்டது.
6. 11-09-1999-ல் மருந்துவாழ் மலையில் வரும் பக்தகோடிகளுக்கு உணவு தயார் செய்யும் வகையில் அமையல் அறை கட்டிடம் கட்டப்பட்டது.
7. 01-10-2002-ல் தெப்பக்குளத்தில் வடக்கு கரையில் 3 அடி கற்களை கட்டி அனைத்து வண்டிகளும் போகும் வகையில் செய்யப்பட்டது.
8. 2003-ல் மருந்துவாழ் மலை அகில உலக வைகுண்டராசர் சிவாலயம் அணையா ஜோதி கட்டிடம் கட்டப்பட்டது.
9. மருந்துவாழ் மலையில் அகில உலகமொழிகள் எல்லோரும் படிக்கும் வகையில் ஆத்மீக பள்ளிக்கூடம் 7 தூண்கள், 7 அடி உயரம்வரை கட்டப்பட்டு துவங்கப்பட்டது.
10. மருந்துவாழ் மலையில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று பொதுமக்கள் மருந்துவாழ் மலையை சுற்றி வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மலைக்கு செல்லும் பாதையில் இருப்பவை:
மலை அடிவாரத்தில் இருந்து செல்லும் படிக்கட்டு
மலையின் அடிவாரத்தில் இருந்து படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சற்று தொலைவில் சமதர்ம சிவாலயம் உள்ளது. தொடர்ந்து சென்றால் அன்னபூரணா மடம், தொடர்ந்து செல்லும்போது மலையில் செங்குத்தாக படிக்கட்டுகள் உள்ளது. இதில் ஏறி சென்றபின்னர் சிறிது இளைப்பாறுதல் நல்லது. இப்போது மலையில் இருந்து கீழ்பகுதியை பார்க்கும்போது இயற்கையின் அதிசயம் கண்களை குளிர்விக்கும்.
வற்றாத நீரூற்று
சமதர்ம சிவாயம்
தொடர்ந்து மலை மீது செல்லும்போது அருள்மிகு பரமார்த்த லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. வழியில் பாறையில் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். படிகட்டுகள் முடியும் இடத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. தொடர்ந்து மலை மீது அமைந்துள்ள ஸ்ரீஹனுமான் கோவிலை தரிசிக்க படிக்கட்டு பாதை இல்லை. செங்குத்தான மலை மீது கற்களை பிடித்து கொண்டு நடந்துதான் செல்லவேண்டும். பக்தர்கள் செல்ல வசதியாக வழிப்பாதையை அம்புக்குறி இட்டு காட்டப்பட்டுள்ளது.
அன்னபூர்ணா மடம்
பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுகள்
மலை மீது ஏறி வரும் பாதை
சற்று தொலைவில் சென்றபின்னர் கீழ்பகுதி காட்சி
பரமார்த்த லிங்கேஸ்வரர் கோவில்
பாறையில் செதுக்கப்பட்ட தெய்வ உருவங்கள்
மலை மீது நடந்து செல்லும்போது ஒருபுதுவித அனுபவத்தை பெறலாம். மலை மீது ஏறுபவர்கள் தண்ணீர் கொண்டு செல்வது நல்லது. ஏனெனில் தொடர்ந்து நடந்து செல்லமுடியாது. ஆங்காங்கே இருந்து இளைப்பாறிதான் செல்லமுடியும். அப்போது கண்டிப்பாக தண்ணீர் தேவைப்படும். மலையில் சாமியார்கள், முனிவர்களை சில நேரங்களில் காணலாம்.
சிவன் கோவில்
படிகட்டுகள் முடிந்த பின்னர் செல்லும் மலைப்பாதை
மலை மீது கைகளால் பிடித்தபடி ஏறி வரும் பக்தர்கள்
மலையின் பாதி வழியில் இருந்து கீழ்பகுதி
ஹனுமான் கோவிலுக்கு சென்றுவரும் சந்தியாசிகள் 
மலையில் இருந்து இயற்கை காட்சிகள்
சுமார் ஒன்றேகால் மணிநேர நடைபயனத்திற்கு பிறகு மலை உச்சியில் உள்ள ஸ்ரீஹனுமான் கோவிலை அடையலாம். அந்த கோவில் ஒரு சிறிய பாறை மீது அமைந்துள்ளது. அங்கு சிறிய அளவிலான ஹனுமான் கோவிலே உள்ளது. ஆனால் இங்கு வந்து வழிபடுவது மிக சக்தி வாய்ந்ததாக பக்தர்கள் கூறினர்.
மலை உச்சியில் உள்ள ஸ்ரீஹனுமான் கோவில்
மலை உச்சியில் பக்தர்கள் 
மலை உச்சியில் இருந்து பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதிகளை காணலாம். அந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருந்துவாழ் மலைக்கு ஒருமுறையேனும் சென்று வரலாம்.

செய்தி, தகவல் மற்றும் போட்டோஸ்
எம்மெஸ், புதியபுயல் முருகன்

Post a Comment

Previous News Next News