குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசை படகுகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் விசை படகு மீனவர்கள் ஆழ் கடலில் சென்று மீன்பிடித்து கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடலில் அவர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கியிருந்து வலையை வீசி மீன் பிடிப்பார்கள். கரைக்கு திரும்பும் படகுகளில் பெரிய மீன்கள் மற்றும் விலை உயர்ந்த மீன்கள் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படும். அவை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
இந்நிலையில் குளச்சலில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 5-க்கும் மேற்பட்ட விசை படகுகள் நேற்று காலையில் கரை திரும்பின. இந்த மீனவர்களின் வலையில் ஏராளமான கொழிசாளை மீன்களும், புல்லன் வகை இறால் மீன்களும் சிக்கின.
அதோடு கனவாய், வளம் போன்ற மீன்களும் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் படகில் இருந்து இறக்கி துறைமுக வளாகத்தில் உள்ள மீன் ஏலக்கூடத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பாக்ஸ்களில் வைக்கப்பட்டு இருந்த மீன்களை வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள் அங்கு குவிந்திருந்தனர்.
கனவாய் மீன்கள் மற்றும் இறால் வகை மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். வாங்கப்பட்ட மீன்கள் உடனடியாக ஐஸ் பெட்டிகளில் அடைக்கப்பட்டு வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதற்காக ஏலக்கூடத்தின் வெளிப்பகுதியில் ஏராளமான வேன்கள், டெம்போக்கள் வரிசையில் காத்திருந்தன. மீன்கள் குவிந்ததால் நேற்று குளச்சல் மீன் ஏலக்கூடம் களை கட்டியிருந்தது.
Tags:
Surrounded Area