குளச்சல் நகரசபை பகுதியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. குளச்சல் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் களிமார் அருகே உள்ள உப்பளப் பகுதியில் கொட்டப்படும். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு அங்கு இயற்கை உரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டது.
கடந்த 19-ம் தேதி இந்த குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். என்றாலும் தீ முழுவதுமாக அணையவில்லை. தீ புகைந்து கொண்டே இருந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக மாறியது. இதனால் லியோன் நகர், களிமார் பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். அவர்கள் இனிமேல் இப்பகுதியில் குப்பை கொட்ட கூடாது என தெரிவித்தனர்.
ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மீண்டும் அங்கு குப்பை கொட்டப்பட்டது. இதையடுத்து களிமார் மற்றும் லியோன் நகர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ, பிரின்ஸ் மற்றும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய நிர்வாகிகளுடன் குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு சாய்சரன் தேஜஸ்வி ஆகியோர் சமரச பேச்சு நடத்தினர். அப்போது இனி களிமார் உப்பள பகுதியில் குப்பைகள் கொட்டப்பட மாட்டாது என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் பொது மக்களின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நகரசபை சார்பில் அங்கு குப்பைகள் கொட்ட முயற்சி நடந்தது. இதனை அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்த்தனர். அதோடு குப்பை கொட்ட வந்த வாகனங்களையும் திருப்பி அனுப்பினர். இதனால் குப்பை ஏற்றி வந்த வாகனங்கள் அதனை கொட்ட இடமின்றி அங்குமிங்கும் அலைந்தன. பின்னர் அவை குளச்சல் பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டன. மொத்தம் 3 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அங்கு நின்றன.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. நேற்று காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல பஸ் நிலையம் வந்தவர்கள் குப்பை வாகனத்தில் இருந்து வந்த துர்நாற்றத்தால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
குப்பை வாகனங்களால் ஏற்பட்ட சுகாதார கேடு பற்றி குளச்சல் நகரசபை ஆணையர் (பொறுப்பு) கீதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
குளச்சலில் தற்போது குப்பை கொட்ட இடமில்லை. இப்பிரச்சினை பற்றி தக்கலை ஆர்.டி.ஓ, அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இதில் முடிவு எடுக்கப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Surrounded Area