இனயம் துறைமுக திட்டத்தை உடனே செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்: ஆதரவு குழு கூட்டத்தில் முடிவு

இனயம் வர்த்தக துறைமுக ஆதரவு குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவ மேஜர் ஜெய்வவரம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், சோனியாகாந்தி அறக்கட்டளை தலைவர் அசோக்குமார் ஆகியோர் பேசினார்கள். மத்திய அரசு வக்கீல் ஜெயசந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இனயம் துறைமுக திட்டத்தை உடனே செயல்படுத்தக்கோரி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

இனயம் துறைமுக திட்டம் குமரி மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் எம்.பி.யாக இருந்த போது கொண்டு வர முடியாத இத்திட்டத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலம் குமரி மாவட்ட மக்களின் 40 ஆண்டு கால கனவு நனவாகப்போகிறது. துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக செயல்படுகிறார்கள். துறைமுகத்துக்கு எதிராக நடந்த போராட்டம் மாவட்ட மக்களுக்காக நடந்தது அல்ல.

இத்திட்டம் ரூ.28 ஆயிரம் கோடியில் செயல்படுத்த இருக்கிறது. துறைமுகம் அமைந்த பின்னர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் என ரூ.1 லட்சம் கோடிக்கான பணிகள் நடக்கும். துறைமுகம் வந்தால் பள்ளிகள், ஆலயங்கள் இடிக்கப்படும் என்று தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். துறைமுகம் கடலில் தான் அமைக்கப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்க தகுதியான இடம் இனயம் தான். துறைமுகத்தை பயன்படுத்தி சிலர் மதக்கலவரங்களை ஏற்படுத்த நினைக்கிறார்கள். துறைமுகம் வேண்டாம் என்று கூறுபவர்கள் அதிகமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அதில் படித்து முடிக்கும் மாணவ–மாணவிகள் எங்கு வேலைக்கு செல்வார்கள்?

உலகிலேயே தரமான ரப்பர் தயாரிக்கும் குமரி மாவட்டத்தில், ரப்பர் தொழிற்சாலை அமைக்க இடம் இல்லை என்று அரசு கூறிவிட்டது. வேறு தொழிற்சாலைகள் அமைக்கவும் இடம் இல்லை. எனவே கடலில் அமையும் துறைமுகம் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

துறைமுக எதிர்ப்புக்கு பின்னணியில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இனயம் துறைமுகத்துக்கு மாவட்டத்தில் சுமார் 5 சதவீத மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் 95 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். எனவே இத்திட்டத்துக்கு மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Post a Comment

Previous News Next News