சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி குமரி மாவட்டத்தில் தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மணவாளக்குறிச்சி அருகே உள்ள வயக்கரை பகுதியில் திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதை அறிந்து பொது மக்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து ஆரான்விளை பகுதியில் கடையை அமைக்க இடம் தேர்வு செய்தனர். அதற்கும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதற்கிடையே மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள தாமரைகுளத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மணவாளக்குறிச்சி, தருவை, பிள்ளையார்கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தாமரைகுளத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் முன் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வாசகம் எழுதிய அட்டைகளை அவர்கள் கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டம் 2 மணி நேரம் நடந்தது. அதன்பிறகு கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:
Manavai News