மணவாளக்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆறான்விளையைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஊர் பொதுமக்கள் மற்றும் ஜனநாயக மாதர் சங்கப் பெண்கள் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆறான்விளை பகுதியில் சுமார் 500–க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் டாஸ்மாக் கடை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல், மாதா குருசடி அமைந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் வழிப்பாதையாகவும் உள்ளது. மேலும் அருகாமையில் பொதுமக்கள் குளிக்கும் குளம், பள்ளிக்கூடம் போன்றவைகளும் உள்ளன. பள்ளி– கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பஸ்சுக்காக நிற்கும் பகுதியாகவும் அது உள்ளது. 

எனவே பொதுமக்கள், பள்ளி– கல்லூரி மாணவ– மாணவிகள், பெண்கள், பக்தர்கள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களின் பாதுகாப்பையும், உரிமையையும், சுதந்திரத்தையும் தரமான வாழ்க்கை சூழலையும், மத நல்லிணக்கத்தையும் கருத்தில்கொண்டு ஆறான்விளை பகுதியில் தொடங்க இருக்கும் மதுபானக்கடையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous News Next News