குளச்சல் நகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் களிமார் உப்பளம் அருகே கொட்டப்படுகிறது. மேலும், இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அங்கு பற்றி எரிந்த தீயை அணைத்து சென்றனர்.
தீயணைப்பு படையினர் தீயை அணைத்து விட்டு சென்ற சில நிமிட இடைவெளியிலேயே மீண்டும் அந்த இடத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. தீவிபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம் களிமார், லியோன்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி சூழ்ந்து கொண்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இதைத்தொடர்ந்து, உடனடியாக குப்பைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பிரின்ஸ் எம்.எல்.ஏ., தலைமையில் பொதுமக்கள் திடீரென சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், களிமார் உப்பளம் பகுதி குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்படாது என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
Tags:
Surrounded Area