குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களுள் ஒன்றான பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடைவிழா வருகிற 26-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி, திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் மண்டைக்காட்டில் உள்ள ஒரு தனியார் மகாலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசியதாவது:- மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடைவிழா வருகிற 26-ம் தேதி கொடியேற்றுடன் தொடங்கி 10 தினங்கள் நடைபெற உள்ளது. விழாவில் வருகிற 3-ம் தேதி வலியபடுக்கை பூஜையும், 7- ம் தேதி ஒடுக்கு பூஜையும், 14- ம் தேதி எட்டாம் கொடை விழாவும் நடக்கிறது. திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
எனவே, திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அனைத்து வசதிகளும் முழுமையாக செய்து தர சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவிழா நாட்களிலும், மீனபரணி கொடைவிழா நடைபெறும் நாளிலும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மாவட்ட காவல்துறை மூலம் மேற்கொள்ள வேண்டும்.
அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்ய வேண்டும். கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் வசதி கிடைக்கவும், பக்தர்கள் குளிப்பதற்கு ஏ.வி.எம். கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரவும் பொதுப்பணிதுறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பஸ்நிலையம் முதல் கோவில் வரையிலான சாலைகளை சீர் செய்திடவும், தெரு வீதிகளை சுத்தமாக பராமரித்திடவும், தற்காலிக கழிவறைகள் அமைத்து, அதற்கு தேவையான தண்ணீரை பீப்பாய்களில் வைத்திடவும், தட்டுபாடின்றி குடிநீர் கிடைத்திடவும் மண்டைக்காடு பேரூராட்சி மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் திருவிழா சிறப்பாக நடக்க அனைத்துதுறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, கோட்டாட்சியர்கள் ராஜ்குமார் (நாகர்கோவில்), ராஜேந்திரன் (பத்மநாபபுரம்), இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) வசந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Surrounded Area