மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றுவிளையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது வீடு ஓலையால் வேயப்பட்ட குடிசை வீடாகும்.
சம்பவத்தன்று ராமகிருஷ்ணன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
பின்னர், வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு சத்தம் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துவிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை முழுமையாக அணைத்தனர். அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் நாசமானது.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் வீட்டில் இருந்த பொருட்கள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் போன்றவை எரிந்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Manavai News