மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதி கூடல்விளையைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 36). இவர் விஐபி டெக்கரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததுடன், ஆட்டோ ஓட்டுனராகவும் பணியாற்றி வந்தார். மேலும் இவர், மணவாளக்குறிச்சி மண்டல பா.ஜனதா தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
இவர் கடந்த 25-ம் தேதி தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சில தொழிலாளர்கள் பனை மரத்தை வெட்டி முறித்து கொண்டிருந்தனர். அவர்கள், பனைமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை பிடித்து இழுப்பதற்காக செல்வேந்திரனை உதவிக்கு அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று செல்வேந்திரன் உதவிக்காக சென்று கயிற்றை பிடித்து இழுத்தார். அப்போது, பனை மரம் முறிந்து தரையில் விழுந்து, துள்ளியதில் எதிர்பாராதவிதமாக மரத்தின் ஒரு பகுதி செல்வேந்திரனின் தலையில் பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சை அளிக்கவேண்டி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் செல்வேந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த செல்வேந்திரனுக்கு சுதா (25) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவருடைய மரணம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.