பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், பண தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
43 நாட்களாகியும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர்.
பொதுமக்கள் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்க வேண்டும் என கூறி வருகிறது. பல இடங்களில் இந்த கார்டுகளை பயன்படுத்துவதற்கான ஸ்வைப் எந்திரங்களையும் வங்கிகள் வழங்கி வருகின்றன. கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொது மக்களுக்கு ரொக்கமில்லா பண பரிவர்த்தனை தொடர்பாக விளக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
அவர் வருகிற 23-ம் தேதி காலை 10 மணிக்கு வடசேரியில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார். அவருடன் வங்கி அதிகாரிகளும் செல்கிறார்கள். வியாபாரிகள், பொதுமக்கள், பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கு மாறுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கம் அளிக்கிறார்.
காலை 11 மணிக்கு திங்கள் சந்தை, பகல் 12 மணிக்கு தக்கலை, மாலை 3 மணிக்கு குலசேகரம், மாலை 4 மணிக்கு மார்த்தாண்டம், மாலை 5 மணிக்கு கருங்கல் பகுதிகளில் மக்களை சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை தொடர்பாக பேசுகிறார். அதன்பின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து அவர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.
Tags:
District News