திங்கள் நகர் வங்கியில் தலா ரூ.4 ஆயிரம் வீதம் கொடுத்ததால் வங்கி அதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்

நாடு முழுவதும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி இரவு அறிவித்தார். பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வந்து சேருவது தாமதம் ஆனதால் பொது மக்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வினியோகிப்பது தாமதம் ஆனது. இதனால் பொது மக்கள் வங்கிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றி சென்றனர்.
குமரி மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு வைக்கப்படாததால் அவை மூடியே கிடக்கின்றன.

இதனால் அனைத்து மக்களும் வங்கிகளுக்கு நேரில் சென்று பணம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் வங்கிகளில் முற்றுகையிட்டு பணம் எடுக்க காத்திருந்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள அரசு வங்கிகள் அனைத்திலும் தினமும் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டு சென்று பணம் கேட்பதால், வங்கி ஊழியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு வங்கிகளுக்கு போதுமான பணம் வழங்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால் வாடிக்கையாளர்களால் அவர்கள் கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் பணம் கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

திங்கள்நகரில் உள்ள ஒரு வங்கி முன்பு நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக குவிந்தனர். அவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் மட்டுமே வழங்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் குறைவாக கொடுத்ததால், வாடிக்கையாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து அது தகராறாக மாறியது. 

இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி வரிசையில் சென்று பணத்தை பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வங்கியின் வெளியே சாலையோரமாக நீண்ட வரிசையில் நின்று பணத்தை பெற்று சென்றனர். மேலும், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Post a Comment

Previous News Next News