குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தூறல் மழையாகவே இந்த மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் நாள் முழுவதும் வானம் இருண்டு, கருமேகக்கூட்டங்களுடன் காட்சி அளித்தது.
அணைப்பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யாததால் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் குறைவாகவே உள்ளன. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டமும் மைனஸ் அளவில்தான் இருந்து வருகிறது. எனவே இந்த அணை நாளுக்கு நாள் வறண்டு கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்றும் காலையில் இருந்தே வானம் மப்பும், மந்தாரமுமாக எப்போது வேண்டுமானாலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதுபோன்ற அறிகுறிகளுடன் காட்சி அளித்தது. ஆனால் மதியம் வரை மழை பெய்யவில்லை. பகல் 3.30 மணிக்குப்பிறகு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நேற்று மாலை வரை நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நீடித்தது.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்த இந்த மழையினால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்பிய மாணவ– மாணவிகளில் சிலர் நனைந்தபடியும், சிலர் குடைகளை பிடித்தபடியும் நடந்து சென்றனர்.
இதேபோல் குலசேகரத்தில் நேற்று பகல் 3½ மணியளவில் வானில் கார் மேகம் சூழ்ந்தது. தொடர்ந்து இடி–மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கன்னியாகுமரி, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தோவாளை, பூதப்பாண்டி, திட்டுவிளை, இறச்சகுளம், தெரிசனங்கோப்பு, திடல், தடிக்காரன்கோணம், அருமநல்லூர், ஞாலம், திற்பரப்பு, பொன்மனை, பேச்சிப்பாறை, களியல், மார்த்தாண்டம், குளச்சல், கொல்லங்கோடு, நித்திரவிளை, ஆற்றூர் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
இதில் கன்னியாகுமரியில் நேற்று மதியம் 1.30 மணியில் இருந்தே மழை பெய்தது. மாலை 6 மணி வரை மழை நீடித்தது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் லாட்ஜ்களில் முடங்கிக் கிடந்தனர்.
நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 152 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 26 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் எந்தப்பகுதியிலும் மழை பதிவாகவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு நேற்று குமரி மாவட்டத்தில் மழையின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. இது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
District News