ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 21–ம் தேதி உலக மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று உலக மீனவர்தினம் கொண்டாடப்பட்டது. கடற்கரை கிராமங்களில் உள்ள ஆலயங்களில் அதிகாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அருட்பணியாளர்கள் தலைமையில் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கடற்கரைக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளங்கள், கட்டுமரங்கள், படகுகள் மீதும், கடலுக்கும் மலர் தூவி மரியாதை செய்தனர். அருட்பணியாளர்கள் மீன்பிடி உபகரணங்கள் மீது புனித நீர் தெளித்து அர்ச்சித்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிக்கு குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குதந்தை எட்வின், குளச்சல் வட்டார குருகுல முதல்வர் செர்வாசியூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காணிக்கை மாதா ஆலய நிர்வாகிகள், துறைமுக நடவடிக்கை குழுவினர், விசைப்படகு சங்கத்தினர், வியாபாரிகள், ஏலக்காரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் அருட்பணியாளர் கிளிட்டஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, பங்குமக்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு சென்று படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்து சிறப்பு ஜெபம் செய்தனர். பள்ளம் தூய மத்தேயு ஆலயத்தில் அருட்பணியாளர் ஜான்சன் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் மீன்பிடி உபகரணங்கள் அர்ச்சிக்கப்பட்டன.
இதுபோல், கன்னியாகுமரி, முட்டம், இனயம், முள்ளூர்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அர்ச்சிப்பு போன்றவை நடந்தன.
Tags:
Surrounded Area