500, 1000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள் மூலம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனு

குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா, மேற்கு மாவட்ட தலைவர் அசோகன் சாலமன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் வக்கீல் ராதாகிருஷ்ணன், யூசுப்கான், ராஜஜெகன், யூஜின்தாஸ், மனோஜ், ஜாகீர் உசேன், ஜெயகுமார், வரதன் ஐரின்சேகர், குமரி முருகேசன், அந்தோணிமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என கடந்த 8-ம் தேதி அறிவித்தது முதல் மக்கள் படுகின்ற தொல்லைக்கு அளவே இல்லை. ஏ.டி.எம். மற்றும் வங்கிகளின் முன்பாக மக்கள் கூட்டம் அலைமோதுவதால் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் நிரம்பி வழிவதால் பணத்தட்டுப்பாடு காரணமாக பணபரிமாற்றம் செய்ய முடியாமல் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர், இல்லத்தரசிகள் ஏமாற்றத்தில் திரும்பி செல்கிற நிலை உள்ளது. தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் உருவாகி வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்கோ அல்லது பணத்தை எடுப்பதற்கோ தொழில்நுட்ப வசதி தற்போது இல்லாத காரணத்தால் இன்னும் ஒரு மாதத்துக்கு இதேநிலைதான் நீடிக்கும் என்று நிதி மந்திரி கூறியிருக்கிறார். இந்தநிலையில் மக்களை பாதிப்பில் இருந்து மீட்க மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை துன்பத்தில் இருந்து மீட்பதற்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் பணபரிமாற்றம் செய்வதற்கு கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் மண்டல உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு பணபரிமாற்றம் எளிய முறையில் சுமுகமாக நடைபெற ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous News Next News