குமரி மாவட்டத்தில் தபால்துறை சார்பில் நடமாடும் பணப்பரிமாற்ற சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பணம் பெறவும் முடியும், டெபாசிட்டும் செய்யலாம்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தபால் நிலையங்களைப் பொறுத்தவரையில், தலைமை தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்களில் மட்டுமே பழைய பணத்தை மாற்றிக்கொடுக்கும் பணியும், டெபாசிட் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் பழைய பணத்தை டெபாசிட் மட்டும் செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பழைய பணத்தை மாற்ற முடியாத நிலை உள்ளது. துணை தபால் நிலையங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ சென்று தான் பழைய பணத்தை மாற்ற வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு தபால் துறை சார்பில் நடமாடும் பணப்பரிமாற்ற சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் படி தபால் ஊழியர்கள் 2 வேன்களில் கிராமப்புற மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்குவார்கள்.
இதுபற்றி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பாண்டியராஜ் கூறியதாவது:–
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையத்தில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து தபால் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தபால் நிலையங்களில் பொதுமக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும், கிராமப்புற மக்கள் பயனடையும் வகையிலும் நடமாடும் பணப்பரிமாற்ற சேவை மையம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சேவை மையத்தில் பணத்தை பெறவும் முடியும், டெபாசிட்டும் செய்துகொள்ளலாம். இதற்காக 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த 2 குழுவினரும் 2 வேன்களில் செல்வார்கள். ஒரு குழுவினர் தக்கலை சுற்றுவட்டார பகுதிக்கும், மற்றொரு குழுவினர் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிக்கும் செல்வார்கள். இந்த வாகனத்தில் பணத்துக்கு பாதுகாப்பாக போலீசாரும் செல்வார்கள்.
இந்த குழுவினர் தினமும் இரவு 7 மணி வரை அந்தந்த பகுதிகளுக்கு சென்று பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை வழங்குவார்கள். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளின் நகல்களைக் கொடுத்து நபர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
District News