மண்டைக்காடு பகுதியில் ஓடும் பஸ்சில் முதியவரிடம் கைவரிசை: பிக்பாக்கெட் திருடன் கைது

மண்டைக்காடு அருகே உள்ள கோவிலான் விளையைச் சேர்ந்தவர் ரசல் (வயது 69). இவர் நேற்று முன்தினம் லெட்சுமிபுரத்தில் இருந்து மினி பஸ்சில் மண்டைக்காடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரது அருகே ஒரு வாலிபர் நின்றபடி பயணம் செய்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் ரசலின் சட்டை பையில் இருந்த ரூ.200 பணத்தை எடுத்தார். இதை ரசல் கவனிக்கவில்லை. வாலிபர் பணத்தை திருடுவதை மற்றொரு வாலிபர் பார்த்து விட்டார். அவர் ரசலிடம் விவரத்தை கூறினார். உடனே ரசல் திருடன், திருடன் என சத்தம் போட்டார்.

உடனே ரசலிடம் பிக்பாக்கெட் அடித்த திருடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். ரசலின் சத்தம் கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் கீழே இறங்கி பிக்பாக்கெட் திருடனை துரத்தினர். சிறிது தூரம் சென்ற நிலையில் அவரை பயணிகள் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர் மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சப்-இன்ஸ்பெக்டர் சோபனா ஜென்சி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு ஆகியோர் பிக்பாக்கெட் திருடனிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் நெய்யூரைச் சேர்ந்த ராஜ் (வயது 40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Post a Comment

Previous News Next News