நாடு முழுவதிலும், 8– ம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதனை தொடர்ந்து பழைய நோட்டுக்களை மாற்றி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் நேற்று முதல் வங்கிகளில் வழங்கப்பட்டது. ஆனால், பழைய நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களை பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஏ.டி.எம். கள் மூடப்பட்ட நிலையில், புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்க வங்கிகளில் நேற்று கூட்டம் அலை மோதியது.
பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு அதிகபட்சமாக ரூ.4000 மட்டுமே வழங்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிலும் பழைய ரூபாய் நோட்டுகள் பற்றிய விபரங்களை மாதிரி விண்ணப்ப படிவங்களில் பூர்த்தி செய்து அடையாள அட்டை நகலுடன் செல்பவர்களுக்கு மட்டுமே வங்கிகளில் பணம் வழங்கப்பட்டது. கேரளாவில் பல தபால் நிலையங்களில் பிற்பகல் வரை புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படவில்லை. அதே போல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் வராததால் பண பரிமாற்றம் நடைபெறவில்லை.
வங்கிகளில் பழைய நோட்டுகளை செலுத்த (அடையாள ஆவணங்களுடன்) தடை இல்லை என்ற போதிலும் வாடிக்கையாளர்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை நேரடியாக கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டினர். வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வங்கியிலும் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், அனைத்து கவுண்டர்களிலும் வாடிக்கையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் பண பரிமாற்றம் சாதாரண நிலைக்கு வரும் என்று வங்கி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Tags:
District News