தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜனதா கட்சி முக்கிய இடத்தை பெறப்போகிறது. வருகிற இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக தலைவர்களின் சுற்றுப்பயண விவரம் தயாராக உள்ளது. மாவட்ட தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள். தேர்தல் நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடைபெற வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி, இலங்கை மந்திரி மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையில் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதுகூட இதுபோன்ற அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளவில்லை.
குமரி மாவட்டத்தை மேம்படுத்துவதற்காகத்தான் இனயம் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவில் மிகப்பெரிய வரலாற்று, பொருளாதார மற்றும் வளர்ச்சி புரட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டம். குமரி மாவட்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் இனயம் வர்த்தக துறைமுகம் உறுதுணையாக இருக்கும். எனவே இத்திட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி விரும்புகிறது. தமிழக நிர்வாகம் முடங்கிவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்து இயக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுவதும் அதிகமாகியுள்ளது. எனவே காவல்துறை இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்டுவதை மத்திய அரசு தடுத்தது தற்காலிகமானது என்றும், இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இத்தனை ஆண்டு காலம் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வும் எத்தனை நீர்நிலைத்திட்டங்களுக்கு நிரந்தர தீர்வு கண்டார்கள் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று துரைமுருகன் சொல்கிறார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி மாற்றப்படும் என்று கூறுவது தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக உள்ளது. காவிரி பிரச்சினையை தி.மு.க. அரசியல் ஆக்கிக்கொண்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தமிழக நதிகளை இணைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். கிடப்பில் போடப்பட்ட நீர்நிலைத்திட்டங்களுக்கு நிரந்தர தீர்வு கண்டிருக்கலாம். ஏன்? காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட முயற்சி எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. நீதிபதிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நிலப்பதிவு சட்டம் முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகள் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையால் சிறுபான்மையினரின் நலன் பாதிக்கப்படாது. இந்தியா முழுவதும் சொட்டு நீர் பாசனம் மூலமாக உற்பத்தி 40 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஏன் தமிழகத்தில் அதை செய்யவில்லை.
தமிழகத்தில் எத்தனை அணைகள் கட்டப்பட்டுள்ளன? மழை நீரை சேகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? நீர் நிலைகளை ஆழப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனவே தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாக்க அத்தனை முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் கருப்பு பணம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.
Tags:
District News