நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கேரள மாநில அரசு பஸ் ஒன்று திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் சுமார் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை கேரள அரசு போக்குவரத்துக்கழக திருவனந்தபுரம் பணிமனையின் டிரைவரான கோட்டயம் அருகில் உள்ள பாலா மேவாடா பகுதியை சேர்ந்த பாலமுரளி (வயது 38) ஓட்டி சென்றார்.
அந்த பஸ் 5.40 மணியளவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள வாத்தியார்விளை திருப்பம் அருகே சென்றபோது எதிரே ஒரு வாகனம் வந்தது. உடனே டிரைவர், அந்த வாகனத்துக்கு வழிவிட பஸ்சை ரோட்டைவிட்டு கீழே இறக்கினார். எதிரே வந்த வாகனம் கடந்து சென்றதும் மீண்டும் பஸ்சை ரோட்டுக்கு கொண்டுவர டிரைவர் முயன்றார். அப்போது அந்த பகுதியில் ரோட்டோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரிகளில் ஒன்றின்மீது பஸ்சின் பின்பகுதி பயங்கரமாக மோதியது. இதில் பின்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் சத்தம்போட்டு அலறினர். உடனே டிரைவர் பாலமுரளி பஸ்சை அதே இடத்தில் நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்.
இந்த விபத்தில் பின்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். அவர்களில் ஒருவர் நாகர்கோவில் பள்ளிவிளை சானல்கரை 7–வது தெருவை சேர்ந்த செல்வம் என்ற பன்னீர்செல்வம் (58) ஆவார். மற்றொருவர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள மாறையான்வட்டம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (56) ஆவார். மேலும் குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையை சேர்ந்த மங்கள ஜார்ஜ் (55), கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள ஆனப்பாறையை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (42) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், ஞானதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த மங்களஜார்ஜ், பிரான்சிஸ் சேவியர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் இறந்த செல்வம், ஜெயக்குமார் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களில் செல்வம் நெசவுத்தொழிலாளி ஆவார். இவர் கேரளமாநிலம் கண்ணுமாமூடு பகுதியில் நெசவு வேலை செய்து வந்தார். அங்கு தங்கி வேலை செய்து வந்த செல்வம் வார இறுதி நாட்களில் அல்லது மாத இறுதியில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவருடன் நாகர்கோவிலை சேர்ந்த மேலும் சிலரும் அங்கு தங்கியிருந்து நெசவுத்தொழில் செய்து வந்தனர். வழக்கமாக அனைவரும் சேர்ந்து வேலைக்கு ரெயிலில் சென்று வருவது வழக்கம். ஆனால் நேற்று செல்வத்துடன் வேலைபார்ப்பவர்கள் ரெயிலில் சென்று விட்டதாகவும், செல்வம் மட்டும் பஸ்சில் சென்றதாகவும், அப்போதுதான் விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இறந்த மற்றொருவரான ஜெயக்குமார் கூலித்தொழிலாளி. வேலை விஷயமாக நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்திருந்த அவர், ஒரு தியேட்டரில் இரவுக்காட்சி சினிமா பார்த்தார். பின்னர் பஸ்சில் நெய்யாற்றின்கரைக்கு சென்றபோது இந்த விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
படுகாயம் அடைந்த 2 பேரில் மங்களஜார்ஜ் மரம் அறுக்கும் ஆலைத் தொழிலாளி ஆவார். இவர் நெய்யாற்றின்கரையில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் வேலை செய்து வந்தார். வேலைக்காக நேற்று காலை புறப்பட்டுச்சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதேபோல் படுகாயம் அடைந்த பிரான்சிஸ் சேவியரும் தொழிலாளி ஆவார். இந்த சம்பவம் குறித்து மங்களஜார்ஜ் கொடுத்த புகாரின்பேரில் கேரள அரசு பஸ் டிரைவர் பாலமுரளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் பாலமுரளி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்த விபத்தால், நேற்று காலை நாகர்கோவில்– திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசாரும், வடசேரி போலீசாரும் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர்.
Tags:
District News