குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு விசைப்படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று பல நாட்கள் தங்கி இருந்து மீன்பிடித்து வருவார்கள். கட்டுமரம் மற்றும் வள்ளங்கள் மூலம் மீன் பிடிப்பவர்கள் அதிகாலையில் கடலுக்குள் சென்று மதியம் கரை திரும்புவது வழக்கம்.
இதுதவிர குளச்சல் கடலில் கூண்டு வைத்து இறால் மீன்களும் வளர்க்கப்படுகிறது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பாறைகள் அமைந்துள்ள பகுதியில் மீனவர்கள் இரும்பு கூண்டு அமைத்து, அதில் ‘கல் இறால்’ என்ற இறால் குஞ்சுகளை வளர விடுவார்கள். அந்த குஞ்சுகள் கூண்டுக்குள்ளே பல மாதங்கள் வளரும். மீன்கள் வெளியே வராமல் இருக்க கூண்டை சுற்றி நைலான் வலைகள் கட்டப்படும். மேலும், கூண்டுக்குள் வளரும் இறாலுக்கு, சிறிய வரை தோட்டு மீன்கள், சிறிய கணவாய் மீன்கள் போன்றவற்றை உணவாக போடப்படுகிறது.
இந்த இறால் மீன்கள் வளர்ந்த பிறகு அந்த கூண்டுகளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வருவார்கள். பின்னர், கூண்டில் இருந்து இறால் மீன்களை ஒவ்வொன்றாக உயிருடன் வெளியே எடுத்து வேறு கூடைகளில் போட்டு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். இந்த இறால் மீன்கள் உயிருடன் இருந்தால் 1 கிலோ ரூ.1,200 வரை விலை போகும். இறால் வியாபாரிகள், இந்த இறால் மீன்களை விலைக்கு வாங்கி தொட்டிகளில் போட்டு உயிருடன் தமிழகம், கேரளா போன்ற பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த கல் இறால் மீன்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு இதற்கு நல்ல விலை கிடைக்கிறது.
Tags:
Surrounded Area