காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 18–ம் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் ரெயில் நிலையத்துக்குள் காங்கிரஸ் கட்சியினரை செல்ல விடாமல் தடுத்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லாரன்ஸ் உள்ளிட்டோர் லேசாக தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் 26–ம் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போலீசார் இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இளைஞர் காங்கிரசார் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையொட்டி அங்கு நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை இளைஞர் காங்கிரசாரும், காங்கிரஸ் கட்சியினரும் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், “இளைஞர் காங்கிரசாரை வேண்டுமென்றே தாக்கியது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். மேலும் இந்த பிரச்சினையை மாநில அளவில் எடுத்துச் செல்வோம்“ என்றார்.
இதில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா, முன்னாள் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், வக்கீல் வின்ஸ் ஆன்றோ, இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரெடி, காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்குமார், சிவகுமார், மகேஷ்லாசர், யூசுப்கான், தங்கம்நடேசன், ஆர்.எஸ்.ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்ட முடிவில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் இளஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் இளைஞர் காங்கிரசாரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வரும்போது போராட்டத்தில் பங்கேற்ற பலரும் உள்ளே வர முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை அரண் அமைத்து தடுத்தனர். எம்.எல்.ஏ.க்களுடன் சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
District News