சுசீந்திரம் புதிய பாலத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியது

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே பழமையான பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சபரிமலை சீசன் காலங்களில் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வாகனங்களில் செல்லும் போது சுசீந்திரம் பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே, இங்கு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சுசீந்திரத்தில் ரூ.7½ கோடி செலவில் புதிய பாலம் கட்ட ஏற்பாடு செய்தார். மேலும், பழைய பாலத்தை அகற்றாமல் புதிய பாலம் கட்டவும் திட்டம் வகுத்தார். அதன்படி, பழையாற்றின் குறுக்கே 6 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு, புதிய பாலம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்தன. பாலத்தையொட்டிய அணுகுசாலைகள் பாலத்துக்கு இணையாக உயர்த்தப்பட்டன. இந்த பணிகளும் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. சாலையில் தார்பரப்பும் பணி நிறைவடைந்தது. தற்போது பாலத்துக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால், கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் நாகர்கோவிலுக்கு வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவர்கள் திறப்புவிழா காணாத புதிய பாலம் வழியாக வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள். நேற்று காலை முதல் இந்த பாலத்தில் அரசு பஸ்களும் ஓடத்தொடங்கின. வழக்கமாக காலை, மாலை நேரங்களில் இந்த பாலத்தின் இருபுறமும் போக்குவரத்து போலீசார் பலர் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவார்கள். ஆனால், நேற்று வாகனங்கள் புதிய பாலம் வழியாக சென்றதால் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறைந்தது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரத்துக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அப்போது, சுசீந்திரத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும். தற்போது புதிய பாலத்தின் வழியாக போக்குவரத்து தொடங்கி விட்டதால் இனிவரும் தீபாவளி மற்றும் சபரிமலை சீசன் காலத்தில் சுசீந்திரத்தில் போக்குவரத்து நெருக்கடி இருக்காது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Post a Comment

Previous News Next News