குமரி மாவட்டம் குளச்சல், சைமன்காலனி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. குறிப்பாக வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது, பெண்களை தாக்கி நகை பறித்து செல்வது உள்பட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. நகை மற்றும் பொருட்களை பறி கொடுத்தவர்கள் குளச்சல் போலீசில் புகார் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவுப்படி, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை மற்றும் தனிப்படை போலீசார் குளச்சல், மண்டைக்காடுபுதூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மண்டைக்காடுபுதூர் பகுதியில் சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது. உடனே, போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட 3 பேரையும் குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் பெயர் வேல்குமார் என்ற வேலு (வயது 30), கருமலையான் (40), நாகராஜ் (39) என்பதும், இவர்கள் அனைவரும் தேனி மாவட்டம் கம்பம், தினகரன் நகரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் குளச்சல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது குளச்சல், மண்டைக்காடு, வெள்ளிச்சந்தை, புதுக்கடை, இரணியல், களியக்காவிளை, மார்த்தாண்டம் போன்ற போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் கொள்ளையடிக்க செல்லும் போது, ‘டவுசர்’ மட்டும் அணிந்து சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்த ‘டவுசர்’ கொள்ளையர்களிடம் இருந்து 72 பவுன் நகையை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 கொள்ளையர்களும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும், தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:
District News