மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.6½ லட்சம் வசூல்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.6½ லட்சம் வசூல்
05-02-2016
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் நேர்ச்சைகளை செலுத்தும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் 16 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் 2 மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அது போல கடந்த 2 மாதத்திற்கு முன்பு திறந்து எண்ணப்பட்ட உண்டியல்கள் மீண்டும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் அருணாச்சலம், பத்மநாபபுரம் தேவசம் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஆய்வாளர் கோமதி, முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்சால், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், குழித்துறை தேவி குமாரி கல்லூரி மாணவிகளும் ஈடுபட்டனர். இதில் ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 187 வசூலானது. மேலும், 32 கிராம் தங்கம், 282 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும், பணங்களும் கிடைத்தன.

Post a Comment

Previous News Next News