கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர் எழுதிய “கடல் நீர் நடுவே” நாவல் வெளியீடு
25-08-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர் கடிகை அருள்ராஜ் எழுதிய “கடல் நீர் நடுவே” எனும் நாவல் வெளியீட்டு விழா கடியப்பட்டணத்தில் வைத்து நடைபெற்றது.
கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த மீனவராகன் அருள்ராஜ் (வயது 43) கடந்த 25 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கேரள மாநிலம் முனபம் துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். தனது மீன்பிடி அனுபவங்களை அடிப்படையாக கொண்டு அவர் “கடல் நீர் நடுவே” என்ற நாவலை எழுதியிருக்கிறார்.
கடந்த காலங்களில் கட்டுமர மீனவர்கள் அடைந்த சிரமங்கள், விசைப்படகு மீனவர்கள் தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் இடர்பாடுகள் போன்றவற்றை விளக்கும் இந்நாவல் கடலை பற்றியும், மீனவர்கள் பற்றியும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. கடியப்பட்டணம் பேதுரு அரங்கில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு பங்குதந்தை லீ.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பாபுஜி நிலையம் அமைப்பின் இயக்குநர் வ.அருள்ராஜ் நூலினை அறிமுகம் செய்து பேசினார். கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் சி.ரூபர்ட் ஜோதி நூலினை வெளியிட, மீனவர் உரிமை கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சே.இராசன் அதனை பெற்றுக் கொண்டார்.
முட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மரிய ரூபன் குமார், எழுத்தாளர்கள் மலர்வதி, ஆன்றனி கிளாரட், ஜி.ஜெரோமியாஸ் உள்ளிட்டோர் நாவலாசிரியரை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியின் முடிவில் ஏற்புரை நிகழ்த்திய நாவலாசிரியர் கடிகை அருள்ராஜ், கடலைப் பற்றியும், மீன்பிடி முறைகளை பற்றியும் அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஒரு பாடநூலாக தனது நாவல் விளங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த நூலினை எழுதியிருப்பதாக கூறினார்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்