மண்டைக்காடு அருகே அரசு பஸ் கண்டெக்டர் மீது தாக்குதல்:
ஒருவர் கைது
25-08-2015
மண்டைக்காடு அருகே உள்ள கல்லத்திவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டெக்டராக பணி புரிந்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த பால்தாஸ் (வயது 55). இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பால்தாஸ் வீட்டில் உள்ள மரத்தின் கிளைகள் பால்ராஜ் வீட்டின் மாடியில் படர்ந்துள்ளது. இதை அகற்ற அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பால்தாஸ், அகஸ்டின், ஸ்டாலின் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பால்ராஜின் மனைவி விமலா என்பவரை தகாத வார்த்தைகளால் பேசி தலைமுடியை பிடித்து இழுத்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து பால்ராஜ் தட்டிகேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பால்ராஜை தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பால்ராஜ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.
மண்டைக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து பால்தாசை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்