திங்கள் நகர் அருகே விபத்து: குளத்துக்குள் பாய்ந்த அரசு பஸ்- டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்
06-05-2015
நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் வழியாக மேல் மிடாலம் நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். காலை 8.30 மணி அளவில் திங்கள் நகரை அடுத்த மேக்கோடு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது பஸ்சின் குறுக்கே ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இதனால் அவர் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் பஸ்சை திருப்பினார். இதில் நிலைதடுமாறிய பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடியது. இதைப்பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். மேலும் சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் பஸ் நிலைதடுமாறி ஓடுவதைக் கண்டுவிலகி ஓடினார்கள். இந்த நிலையில் அந்த பஸ் சாலையோரத்தில் இருந்த ஒரு குளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் சண்முகம் (வயது48) என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த ஒரு வாலிபர், 2 குழந்தைகள் மேலும் ஒரு பெண் ஆகிய 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குளத்துக்குள் பஸ் பாய்ந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. குளத்தில் சிறிது அளவே தண்ணீர் இருந்ததாலும், செடி கொடிகள் புதர்போல மண்டி இருந்ததாலும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் இரணியல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பிரசாந்த்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்து பற்றி அவர்கள் விசாரணை நடத்தினார்கள். நாகர்கோவிலில் இருந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு அந்த பஸ்சை குளத்தில் இருந்து மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்