நாகர்கோவில் ரெயிலில் அனாதையாக வந்த 1½ வயது ஆண் குழந்தை உதவி மையத்தில் ஒப்படைப்பு
23-08-2014
மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் பயணிகள் இறங்கினர். அந்த நேரத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ரெயில் நிலையத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது முன்பதிவு அல்லாத பொதுப்பெட்டியில் 1½ வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று தன்னந்தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த குழந்தையை மீட்டனர். பின்னர் இதுபற்றி ரெயில் நிலைய ஒலிபெருக்கியில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் குழந்தையைத் தேடி யாரும் வரவில்லை. அந்த குழந்தை பனியன், ஜட்டி அணிந்திருந்தான். அந்த குழந்தையை விட்டுச் சென்றது யார் என்று தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையை நாகர்கோவிலில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் (சைல்டு ஹெல்ப் லைன்) ஒப்படைத்தனர். குழந்தைகள் உதவி மையத்தினர், நெல்லையில் உள்ள ‘சரணாலயம்’ குழந்தைகள் காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சரணாலயம் அமைப்பினர் நாகர்கோவில் வந்து மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரை தொடர்பு கொண்டு, குழந்தையை மீட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்