மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து: போலீசார் விசாரணை
09-07-2014
மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. மகன் பபின். குடும்ப தகராறு காரணமாக ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் திங்கள்சந்தை ஆட்டோ ஸ்டாண்டில் சவாரிக்காக காத்து இருந்தார். அப்போது 2 பேர் அங்கு வந்து அவரிடம் கோணங்காடுக்கு செல்ல வேண்டும் என்று கூறி ஆட்டோவில் சென்றனர்.
வழியில் உடையார்விளை என்ற இடத்தில் ஆட்டோவை நிறுத்தி அவர்கள் 2 பேரும் மது குடித்து உள்ளனர். பிறகு மீண்டும் ஆட்டோவில் கோணங்காடிற்கு சென்றனர். அங்கு ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணனுக்கும் 2 பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேர் சேர்ந்து ராதா கிருஷ்ணனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ராதா கிருஷ்ணனை பொதுமக்கள் காப்பாற்றி குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த கத்திக்குத்து பற்றி குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்திய அந்த 2 பேரும் யார்? எதற்காக கத்திக்குத்து நடந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்