வெள்ளிச்சந்தை அருகே கோவில், கிறிஸ்தவ ஆலயம், தர்காவில் அடுத்தடுத்து திருட்டு
03-07-2014
வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளையில் புனித பனிமயமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன்புறம் சுற்றுச்சுவரையொட்டி வேளாங்கண்ணி குருசடி அமைந்துள்ளது. இதன் கீழ்பகுதியில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த பகுதியினர் ஆலயத்திற்கு சென்றனர். அப்போது குருசடியில் உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மர்ம ஆசாமி உண்டியலை உடைத்து அதற்குள் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ஊர்தலைவர் அருள்செல்வன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல வேளாங்கண்ணி குருசடி அருகே தர்கா ஒன்று உள்ளது. அந்த தர்காவிலும் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பணமும் மர்ம ஆசாமியால் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அறிந்ததும் தர்கா நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதற்கிடையே மணவிளை சந்திப்பில் உள்ள வாதையான் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் இருந்த பணத்தையும் மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டார். இது குறித்து கோவில் நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்ததும் வெள்ளிச்சந்தை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் எவ்வளவு பணம் திருட்டு போனது என்ற விவரம் தெரியவில்லை. ஒரேநேரத்தில் கோவில், கிறிஸ்தவ ஆலயம், தர்கா என 3 இடங்களில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்