கொட்டில்பாடு கிராமத்தில் மீனவர் வீட்டை மின்னல் தாக்கியது
25-05-2014
மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல் பகுதிகளில் இன்று அதிகாலை இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இது சுமார் 3 மணி நேரம் நீடித்தது. மண்டைக்காடு அருகே உள்ள கொட்டில்பாடு மீனவர் கிராமத்தை சேர்ந்த மரியதாசன் (வயது 70) என்பவரின் வீட்டில் இடி தாக்கியது. இச்சம்பவத்தின்போது இவரது மனைவி சாந்தூஸ் மேரி (65), மகள் சின்ஸி (24), மருமகன் உபால்டு சேவியர் (32), குழந்தைகள் ஆன்றியா (3½), 7½ மாதமான ஆண் குழந்தை மற்றும் இவர்களது உறவினர் லாரன்ஸ் (52) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 4 மணி அளவில் இடியுடன் பெய்த கனமழையால் வீட்டின் முன்பக்கத்தில் சுவரில் இடி தாக்கியது. இதில் சுவரில் ஒரு பெரிய ஓட்டை விழுந்தது. மேலும் வீட்டில் இருந்த டி.வி., மிக்சி, கிரைண்டர் சேதம் அடைந்தது. மேலும் மரியதாசன், லாரன்ஸ் ஆகியோருக்கு அதிர்ச்சியில் சிறிது நேரம் வாய் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல் பக்கத்து வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்