குளச்சல் நகராட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா? வல்லுனர் குழுவினர் ஆய்வு
30/05/2014
குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு தினமும் குடிநீர் வினியோகிக்க 21 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் உப்புத்தன்மையுடன் வருகிறது.
இதை சமாளிக்கவும், பெருகி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் குளச்சல் நகராட்சி சார்பில் குளச்சல் பகுதி கடல்நீரை குடிநீராக மாற்றி பொதுமக்களுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கடல்நீரை குடிநீராக மாற்ற சாத்தியம் உள்ளதா? என்று கண்டறிய தனியார் நிறுவனத்திடம் ஆய்வுப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தனியார் கம்பெனி மேலாளர் பாலமுருகன், என்ஜினீயர் பிரபு உள்ளிட்ட வல்லுனர் குழுவினர் நேற்று குளச்சல் துறைமுக பாலம் பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது கடல்நீரை குடிநீராக்க மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர். இந்த சோதனையின்போது நகர்மன்ற தலைவர் நசீர், என்ஜினீயர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். இது குறித்து வல்லுனர்குழுவினர் கூறும்போது, “ஒரு பிளாண்ட் நிறுவப்பட்டால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க முடியும். ஒரு லட்சம் லிட்டர் யூனிட் நிறுவ 3 சென்ட் நிலப்பரப்பு தேவைப்படும்“ என்றனர்.
நகராட்சி தலைவர் நசீர் கூறும்போது, “தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கைகொடுக்கும். தொடர்ந்து 50 லட்சம் லிட்டர் வரை குடிநீர் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். ஆய்வறிக்கை வந்த பின்னர் அரசுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்“ என்றார்.
Tags:
District News