மணவாளக்குறிச்சி அருகே
கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த அண்ணன்-தம்பி
02-02-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவ கிராமம் கடியபட்டணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகன்கள் சகாய வில்பிரட் (வயது 30), சகாய ஸ்டாலின் (27). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 15 கடல் மைல் தொலைவில் அவர்கள் சென்று கொண்டு இருந்தபோது கடலில் பயங்கர சூறைக்காற்று வீசியது. இதில் அவர்களது பைபர் படகு கடலில் கவிழ்ந்தது.
கவிழ்ந்த வேகத்தில் படகு உடைந்தது. படகில் இருந்த என்ஜின் மற்றும் தொழில் கருவிகள் கடலில் மூழ்கின. அண்ணன்-தம்பி 2 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இன்னொரு படகில் ஜான்பிரிட்டோ, வெனிஷ் உள்பட 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கொண்டு இருந்தனர்.
அவர்கள் நடுக்கடலில் 2 பேர் தத்தளித்துக் கொண்டு இருப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் மீட்டனர். நேற்று காலை 8.30 மணிக்கு அவர்களை அழைத்துக்கொண்டு கரைக்கு வந்தனர். இது பற்றி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்களிடம் குளச்சல் மரைன் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்