மணவாளக்குறிச்சி அருகே காதலியை டீசல் ஊற்றி எரித்ததாக வாலிபர் கைது

மணவாளக்குறிச்சி அருகே  காதலியை டீசல் ஊற்றி எரித்ததாக  வாலிபர் கைது
26-05-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பிள்ளைதோப்பு அழிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர். கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் சுபானி (வயது 16). இவர் முட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும்போது முட்டம் அலங்கார மாதா தெருவைச் சேர்ந்த எவரெஸ்ட் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. சுபானியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவரை கண்டித்தனர். தொடர்ந்து சுபானியை பள்ளிக்கு அனுப்பவில்லை. அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். எவரெஸ்ட் உடனுடனான தொடர்பையும் துண்டித்தார். 

இந்த நிலையில் நேற்று மாலை எவரெஸ்ட் சுபானி வீட்டிற்கு சென்றார். வீட்டில் வேறு யாரும் இல்லை. எவரெஸ்ட் வருவதை பார்த்த சுபானி வீட்டின் கழிவறைக்கு சென்று மறைந்து இருந்தார். வீடு முழுவதும் சுபானியை எவரெஸ்ட் தேடினார். கழிவறையில் மறைந்திருந்த சுபானியை எவரெஸ்ட் கையை பிடித்து இழுத்தார். இதனால் சுபானி கூச்சலிட்டார். 
ஆத்திரமடைந்த எவரெஸ்ட், தான் மறைந்து வைத்திருந்த டீசலை அவர் மீது ஊற்றி தீ வைத்தார். சுபானியின் உடலில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சுபானி வீட்டை விட்டு வெளியேறி பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஓடிச்சென்றார். உறவினர்கள் சுபானியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெள்ளிச் சந்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து எவரெஸ்ட்டை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட எவரெஸ்ட் போலீசாரிடம் கூறியதாவது:- நான் சுபானியை கடந்த 1 1/2 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். காதல் விவகாரம் சுபானியின் பெற்றோருக்கு தெரிந்த பிறகு அவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். இதனால் நான் சுபானியை சந்தித்து பேச முடியாமல் இருந்தேன். அவ்வப்போது சுபானி ஊருக்கு செல்வேன். அவரிடம் பேச முயற்சி மேற்கொள்வேன். ஆனால் அவர் என்னுடன் பேச மாட்டார். 
நேற்றும் அங்கு சென்றிருந்தேன். வீட்டில் சுபானியின் பெற்றோர் நாகர்கோவிலில் உள்ள உறவினர் திருமணத்திற்காக சென்று இருந்தனர். இதையறிந்த நான் எப்படியாவது இன்று சுபானியை சந்தித்து பேச நினைத்தேன். நான் வருவதை பார்த்ததும் சுபானி வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் கொண்டு வந்திருந்த டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous News Next News