அமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் குமரி மாவட்ட இளைஞரின் இசைக்குறும்படம்

அமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் குமரி மாவட்ட இளைஞரின் இசைக்குறும்படம்
26-05-2013
அமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் குமரி மாவட்ட இளைஞரின் இசைக்குறும்படம் திரையிடப்படுகிறது.

அமெரிக்காவில் இயங்கிவரும் சைபர்ஹம் எனும் அமைப்பு 1995ம் ஆண்டு எரிக் மான்ட்கோமரி என்பவரால் துவங்கப்பட்டு ஆண்டு தோறும் இசை மற்றும் கலைத் துறையைச் சார்ந்த சிறந்த படைப்புகள் திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் பல்வேறு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த அப்துல் ஹலீம் என்பவரது தி பீட் வேர்ல்ட் எனும் இசைக் குறும்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அக்குறும்படம் நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது. தி பீட் வேர்ல்ட் எனும் இசைக் குறும்படத்தை இந்தியாவின் கடம், மேற்கு ஆப்பிரிக்காவின் ஜெம்பே, அரேபியாவின் டாம்பரின், கஞ்சிரா, ஐரோப்பாவின் வயலின் போன்ற இசைக்கருவிகளோடும் மற்றும் தேங்காய் சிரட்டை, கப்ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் இசையை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதாகும்.
இக்குறும்படத்தை உருவாக்கியுள்ள அப்துல் ஹலீமுக்கு வயது 30 ஆகும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இசையில் பட்டம் பெற்றதுடன் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் தஞ்சை தமிழ் பல்கலையில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளார்.
கடம், டாம்பரின், ஜெம்பே, செண்டை ஆகிய இசைக் கருவிகளை இசைத்து 6 உலக சாதனைகளை படைத்துள்ளார். இவரது மாணவர்கள் 17 பேரை உலக சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளார். தமிழக அரசின் கலை வளர்மணி, பாரதி யுவகேந்திராவின் சுவாமி விவேகானந்தா, குமரி கலைக் கழகத்தின் நாதலய மணி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள இவர் அகில இந்திய வானொலி நிலையத்தின் ஏ கிரேடு வித்வான் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

Previous News Next News