குளச்சல் கடலில் சூறைக்காற்று-கொந்தளிப்பு:
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
07-03-2013
குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கடலோர கிராமங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. ஆனால் கடலுக்குள் சூறைக்காற்றும், அலைகளின் கொந்தளிப்பும் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக குளச்சல், கோடிமுனை, குறும்பனை, இணையம், இரையுமன்துறை, முள்ளூர்துறை, ராமன் துறை பகுதிகளில் கடலின் சீற்றமும் அலைகளின் கொந்தளிப்பும் அதிகமாக இருந்தது. குளச்சல் பகுதியில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டின. குளச்சல் மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினமும் அதிகாலை வேளையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்கள், கட்டுமரங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
ஆனால் நேற்று நள்ளிரவு முதல் கடல் சீற்றமும், ஆழ்கடல் சூறாவளியும் காணப்பட்டதால் இன்று காலை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. அவர்களின் வள்ளங்கள், கட்டுமரங்கள் அனைத்தும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. ஏற்கனவே கடலுக்கு சென்ற விசைப்படகுகளும், சூறாவளி காரணமாக கரைக்கு திரும்பவில்லை. இதனால் குளச்சல் மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை நடைபெறவில்லை. மார்க்கெட்டும் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்