முட்டம் கடலில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி: குடும்பத்தினர் கதறல்
06-03-2013
குமரி மாவட்ட கடற்கரை கிராமமான முட்டம் ஜேம்ஸ் நகரை சேர்ந்தவர் கேந்திரம். இவரது மகன் ஜூடுவின்டோ (வயது 26). வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்காக ஜூடுவின்டோ விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் காலை நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஜூடுவின்டோ தனது நண்பர்களுடன் முட்டம் கடற்கரைக்கு சென்றார். அங்கு கடல் அலையில் காலை நனைத்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மரணபாறையில் ஏறி நின்று கடலை ரசித்தார். திடீரென ராட்சத அலை மரணபாதையில் மோதியது. அப்போது பாறையில் நின்று கொண்டிருந்த ஜூடுவின்டோ ராட்சத அலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைக்கண்ட நண்பர்கள் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அலறினர். அந்த பகுதியில் நின்றவர்கள் ஓடி வந்து கடலுக்குள் இறங்கி ஜூடுவின்டோவை தேடினர். எனினும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து தீயணைப்பு துறை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை, குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் ரத்தினமணி மற்றும் கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கடலில் இறங்கி ஜூடுவின்டோவை தேடினர். எனினும் ஜூடுவின்டோ உடனடியாக கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மரண பாறையின் அருகிலேயே ஜூடுவின்டோவின் உடல் மிதந்ததை அப்பகுதியினர் கண்டனர். அவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், ஜூடுவின்டோ உடல் மீட்கப்பட்டது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்