3 பெண்களை தூக்கி வீசியது மதம் பிடித்த யானை
கோவில் திருவிழாவில் பரபரப்பு
07-03-2013
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பனங்கால்முக்கு பகுதியில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக திருவிழா நடைபெற்று வந்தது. கடைசிநாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி காலையில் 7 யானைகள் அணிவகுத்து செல்ல பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுக்கடை, பைங்குளம், அம்சி வழியாக பத்ரேஸ்வரி அம்மன் கோவிலுக்கு மதியம் 1 மணிக்கு வந்தது. அதன்பின்னர் கோவில் வளாகத்தில் 7 யானைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் எடுத்துவந்த பால்குடத்தை அபிஷேகத்திற்காக இறக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இதை பார்ப்பதற்காக அங்கு ஆண்களும், பெண்களும் திரண்டு நின்று கொண்டிருந்தனர். பிற்பகல் 2 மணி அளவில் அங்கு நின்ற 7 யானைகளில் ஒரு யானைக்கு திடீரென்று மதம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து அந்த யானை அருகில் நின்று கொண்டிருந்த வாகைவிளையை சேர்ந்த பாலம்மாள் (வயது 60) என்ற பெண்ணை தூக்கி அருகில் இருந்த சுவற்றில் அடித்தது. மேலும், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வாகைவிளையை சேர்ந்த சரஸ்வதி மற்றும் தங்கப்பன் என்பவரது மனைவி பாலம்மாள் ஆகிய 2 பேரையும் தூக்கி வீசியது.
இதை பார்த்ததும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி அலறியடித்துக் கொண்டு ஓடினர். யானை தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்த பாலம்மாளை (60) திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும், படுகாயம் அடைந்த மற்றொரு பாலம்மாள், சரஸ்வதி ஆகியோரையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மதம்பிடித்து பிளிறிக்கொண்டிருந்ததை தொடர்ந்து அங்கிருந்த யானைப்பாகன்கள் அனைவரும் சேர்ந்து யானையை பிடித்து கட்டிப்போட்டனர். இதனால் பொதுமக்களும், பக்தர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற ஆராட்டு நிகழ்ச்சியில் 6 யானைகள் மட்டும் பங்கேற்றன. இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்