மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் கலெக்டர் நாகராஜன் அறிவிப்பு

மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் கலெக்டர் நாகராஜன் அறிவிப்பு
10-02-2013
மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படும் என்று கலெக்டர் நாகராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மகளிர் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களையும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளையும் ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட மற்றும் மாநில அளவில் 2011–12–ம் நிதி ஆண்டிற்கு “மணிமேகலை விருதுகள்“ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி குமரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கும் “மணிமேகலை விருதுகள்“ வழங்கப்பட உள்ளன. இந்த விருதை பெற மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் பின்வரும் தகுதிகளை பெற்று இருக்க வேண்டும்.
இதன்படி மகளிர் சுய உதவிக்குழு 4 ஆண்டுகளுக்கு குறையாமல் செயல்பட்டுகொண்டு இருக்க வேண்டும். 2–ம் கட்ட தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 1–7–11–க்கு முன்பு குறைந்தது ஒரு முறையாவது ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் மாற்றம் செய்திருக்க வேண்டும். குறைந்தது 3 முறையாவது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று தவணை நிலுவையின்றி முறையாக செலுத்தியிருக்க வேண்டும்.
சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கான விருது பெற, கூட்டமைப்பு 1–7–11 அன்று குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் நல்ல முறையில் செயல்பட்டு கொண்டு இருக்க வேண்டும். அனைத்து மகளிர் திட்டக்குழுக்களும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். 1–7–2009 முதல் 30–6–11 முடிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பானது குறைந்த பட்சம் 20 கூட்டங்கள் கூட்டியிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகள் பெற்ற சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், பூமாலை வணிக வளாகம், வடசேரி முகவரியில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தையோ அல்லது அந்தப்பகுதி வட்டார வளர்ச்சி அதிகாரிகளையோ (கிராம ஊராட்சி) அணுகி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வருகிற 15–ந்தேதிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous News Next News