கன்னியாகுமரியில் இருந்து நீரோடிக்கு பஸ் போக்குவரத்து
அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார்
10-02-2013
கன்னியாகுமரியில் இருந்து நீரோடி வரை 43 கிராமங்களை இணைக்கும் 102 கிலோ மீட்டர் தூர சாலையில் மணக்குடியில் இருந்த பாலம் சுனாமி பேரலையின்போது அடித்து செல்லப்பட்டதால் பஸ்போக்குவரத்து தடைபட்டது. அந்த பாலம் ரூ.2½ கோடி செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது.
அதை முதல் அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி சின்ன முட்டம் ஆகிய இடங்களில் இருந்து நீரோடிக்கு, கடற்கரை சாலை வழியாக 2 புதிய பஸ் போக்குவரத்து தொடங்கியது. கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தில் மதியம் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பச்சைமால் கொடி அசைத்து 2 பஸ்போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.
அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சிவசங்கரலிங்கம், துணை மேலாளர் (வணிகம்) தாணுலிங்கம் மற்றும் கோட்ட மேலாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் கவிஞர் சதாசிவம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தம்பித்தங்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் காரவிளை செல்வம், கன்னியாகுமரி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வின்ஸ்டன், நகர அ.தி.மு.க. செயலாளர் ஜெ.ஜெ.ஆர்.ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



