மணவை செய்திகள்

மணவாளக்குறிச்சி பாபுஜி கல்வி குழுமத்தின்
புதிய பொறியியல் கல்லூரி
13-10-2012
மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்றாகும். தக்கலை கல்வி மாவட்டத்தில் பல வருடங்களாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சியினை பெற்றுவருகிறது. இப்பள்ளி 'தாடி சார்' என்று அழைக்கப்படும் சந்திரசேகர் அவர்களால் துவங்கப்பெற்றது. தற்போது இந்த பள்ளியின் தாளாளராக பிரபல தொழிலதிபரான கடியப்பட்டணத்தை சேர்ந்த சார்லஸ் உள்ளார். இவர் கத்தார் நாட்டில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

முதலில் சாதாரண கட்டிடத்தில் இயங்கி வந்த இப்பள்ளி, தற்போது நவீன தன்மையுடன் அடுக்குமாடி கட்டிடமாக காட்சியளிக்கிறது. தமிழ் வழி கல்வியுடன் ஆங்கில வழி கல்வியும் கற்றுகொடுக்கப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்தினுள் பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரியும் உள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியராக கிறிஸ்டோபர் அவர்களும், பாபுஜி கல்வியியல் கல்லூரியின் முதல்வராக ரெஞ்சிதம் அவர்களும் உள்ளனர்.
 பொறியியல் கல்லூரியின் கட்டிடங்கள்
 வகுப்பறைகள்
அலங்கரிப்பட்டுள்ள புல்வெளிகள் 
தற்போது பாபுஜி கல்வி குழுமத்தின் ஒரு அங்கமாக மணவாளக்குறிச்சி அருகே கல்லுகட்டி பகுதியில் நவீன வசதியுடன் கூடிய பொறியியல் கட்டப்பட்டு, இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. "ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்" என்ற பெயரில் இயங்குகிறது.இக்கல்லூரியின் கட்டிடங்கள் வெளிநாட்டு கல்வி நிலையங்களின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் அமரும் இருக்கைகள் வகுப்பறைகள் அனைத்துமே உயர்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி முதலில் மணவாளக்குறிச்சி பகுதியில் அமைக்கப்படுவதாக இருந்தது. அதற்கு போதிய இடவசதி இன்மையால் கல்லுகட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.

மணவாளக்குறிச்சியில்
பயணிகள் அமரும் இருக்கைகளின் நிலை
13-10-2012
குமரி மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்கள், முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் குவியும் இடங்களில் பயணிகள் இருக்கைகள் அரசால் வைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் சிமெண்ட் பெஞ்ச் போன்ற அமைப்புகளை உடையது. இதை பொதுமக்கள் பஸ் நிறுத்தம் போன்ற பகுதிகளில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் வயதானவர்களும் சற்று நேரம் அந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து இளைப்பாறுவர்.
 சரிந்து விழுந்து கிடக்கும் இருக்கை
சின்னவிளை கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள இருக்கை
இந்நிலையில் மணவாளக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட இருக்கைகள் சில பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அரசு ஏற்கனவே முன்பு ஒரு வகையான இருக்கைகளை அமைத்து கொடுத்தது. அது பழுதடைந்ததால், தற்போது சற்று உயரமான இருக்கைகளை அமைத்து கொடுத்தது. அதுவும் பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளது. பயணிகள் இருக்கைகளை பயன்படுத்தும் மக்களும் அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். 

மணவாளக்குறிச்சி சந்தையில்
குவிந்த சிப்பி மீன்கள்
13-10-2012
வருடத்தில் ஒவ்வொரு பருவ காலத்திலும் கடலில் செல்லும் மீனவர்கள் சில குறிப்பிட்ட மீன்களை அதிக அளவில் பிடித்து வருவார்கள். அதன்படி, தற்போது  'தோடு' என்றழைக்கபடும் சிப்பி மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இவ்வகை சிப்பிகள் மணவாளக்குறிச்சி சின்னவிளை கடலில் அதிக அளவில் மீனவர்களால் எடுத்து வரப்படுகிறது. முன்பு குறைந்த அளவே சிப்பிகள் வந்தன. அப்போது 100 எண்ணம ரூ.100 -ல் இருந்து 150-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர்   ரூ.80 -ல் இருந்து ரூ.100-க்கு விற்கப்பட்டது. 
 சாக்கு பைகளில் பிடிக்கப்பட்ட சிப்பிகள் 
சின்னவிளை கடற்கரையில் சிப்பிகள் பிடிக்க வந்த மீனவர்களும்,
அவற்றை வாங்க வந்த நபரும்
தற்போது அதிக அளவில் சிப்பிகள் வருவதால் ரூ.50 முதல் ரூ.60 என்ற விளையில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களும் ஆர்வமுடன் சிப்பி மீன்களை வாங்கி செல்கின்றனர். சில வேளைகளில் மணவாளக்குறிச்சி மீன்சந்தையில் காலை முதல் இரவு 8 மணி வரைக்கும் கூட சிப்பி மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மணவாளக்குறிச்சி பகுதியில்
விரிவாக்கப்பட்ட மின்தடை
13-10-2012
தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்ததால் சென்னை தவிர மற்ற இடங்களில் தினமும் 12-ல் இருந்து 16 மணி நேர மின்தடை இருந்து வருகிறது. இதனால் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள ஆசாரிமார்தெரு, வடக்கன்பாகம், சக்கப்பத்து, படர்நிலம், சேரமங்கலம், குன்னங்காடு, திருனைனார்குறிச்சி, வெள்ளிசந்தை போன்ற பகுதிகளில் இந்த மின்தடை அமலில் இருந்து வந்தது. பிறபகுதிகளான பள்ளிதெரு, சின்னவிளை ரோடு, சின்னவிளை, பெரியவிளை, ஆறான்விளை, பரப்பற்று, புதூர், கடியப்பட்டணம், முட்டம் போன்ற பகுதிகளில் இந்த மின்தடை இருப்பதில்லை. மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய மணல் ஆலை இருப்பதால், அதற்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டி, மேற்படி பகுதியில் மின்தடை இருப்பதில்லை.

இதனால் ஒரு பகுதியில் நாள் முழுவதும் மின்சாரமும், மறுபகுதியில் தினமு 16 மணி நேர மின்தடையும் இருந்து வந்தது. இந்நிலையில் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை மின் வரிசையை தற்போது மாற்றி கொடுக்கப்பட்டு, ஆலைக்கு மட்டும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மற்ற பகுதிகளில் 16 மணி நேர மின்தடை வழங்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த மணவாளக்குறிச்சி பகுதியும் இரவில் காணாமல் போனது.

மணவாளக்குறிச்சியில் திடீர் மழை
13-10-2012
குமரி மாவட்டத்தில் தற்போது ஆங்காங்கே மழை மொழிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மார்த்தாண்டம், குலசேகரம் போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்தது. நாகர்கோவிலிலும் இந்த மழையை ஓரளவு காணமுடிந்தது. பலத்த மழை இல்லாவிட்டாலும், வெயிலின் உஷ்ணத்தை குறைத்தது இந்த மழை. ஆனால் மணவாளக்குறிச்சி பகுதியில் மழை மேகங்கள் திரண்டு வரும், மழை மட்டும் பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலையில் இருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. 

இதனால் வெப்பம் தனித்து குளிர்ந்த சூழல் உருவானது. மக்களும் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர். 



Post a Comment

Previous News Next News